இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடர் விளையாடி முடித்தவுடன் டி20 உலக கோப்பை தொடரில் பங்கு பெற உள்ளது. இந்த சூழ்நிலையில் டி20 கிரிக்கெட்டை மேலும் சுவாரசியமாக்கும் வகையில் மைதான கள நடுவராக செயல்படும் சைமன் டவுல் ஒரு விதிமுறையை பின்பற்றுமாறு பேசி இருக்கிறார்.
கிரிக்கெட்டை சுவாரசியமாக்கும் வகையில் துவங்கப்பட்ட டி20 கிரிக்கெட் போட்டிகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் ஆர்வத்தை தூண்டி வருகிறது. இருப்பினும் இது பேட்ஸ்மேன்களுக்கான போட்டியாகவே இருப்பதாக பல முன்னாள் வீரர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ரவிச்சந்திரன் அஸ்வினும் கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரை மேற்கோள்காட்டி டி20 முற்றிலும் பேட்ஸ்மேன்கள் கேமாக இருக்கிறது என்று பேசி இருந்தார். இந்த சூழ்நிலையில் பேட்ஸ்மேன் மற்றும் பவுலர் இருவருக்கும் சரி சமமாக இருக்கும் வகையில் சைமன் டவுல் சில யோசனைகளை கூறியிருக்கிறார்.
அதாவது “டி20 கிரிக்கெட்டில் இதுவரை ஒரு பவுலர் நான்கு ஓவர்கள் அதிகபட்சமாக வீச முடியும். எனவே ஒரு அணியின் சிறந்த பவுலர் நான்கு ஓவருக்கு பதிலாக 5 ஓவராக வீச முடியும் என்று விதி முறையை மாற்றி அமைத்தால் டி20 போட்டியானது பேட்ஸ்மேன் மற்றும் பவுலர் என இருவருக்கும் சரிசமமாக அமையும். மேலும் பார்வையாளர்களுக்கும் சுவாரசியத்தை கூட்டும் வகையில் இருக்கும்” என்று பேசி இருக்கிறார்.

