நடப்பு நியூசிலாந்து அணியின் நட்சத்திர வீரராக ரச்சின் ரவீந்திரா திகழ்கிறார். ஓடிஐ, டி20ஐ, டெஸ்ட் என அனைத்து வடிவக் கிரிக்கெட்டிலும் அவர் தனது திறனை நிரூபித்து அணியின் முக்கிய டாப் ஆர்டர் வீரராக இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது நடந்துக் கொண்டிருக்கும் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் 2 சதம் விளாசி நியூசிலாந்து அணி இறுதிப் போட்டிக்கு தகுதிப் பெறுவதில் பக்கபலமாக இருந்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அண்மையில் வேகப்பந்து வீச்சாளர் டிம் சவுதி, நியூசிலாந்து அணியின் பார்வையில் இல்லாமல் கடைசி நேரத்தில் வந்து அணியின் அங்கமாக எவ்வாறு ரச்சின் ரவீந்திரா மாறினார் என்பது பற்றிப் பேசியுள்ளார். டிம் சவுதி பேசியிருப்பதாவது, ” 2023 உலகக் கோப்பையில் கேன் வில்லியம்சன் காயத்தால் அவ்வப்போது விலகினார். அவருக்கு முழங்கால் காயம் ஏற்படவில்லை என்றால் ரச்சின் ரவீந்திராவுக்கு வாய்ப்புக் கிடைத்தே இருக்காது. “
” ஆனால் எல்லாம் ஒரு காரணமாகத் தானே நடக்கும். அது போலத் தான் இதுவும். கேன் வில்லியம்சன் விலக, ரச்சின் ரவீந்திரா அணிக்குள் வந்து சிறப்பாக ஆடினார். ரச்சின் என்னதான் இளமையான வீரராக இருந்தாலும் பக்குவம் வாய்ந்த மனநிலை இருக்கிறது. கேன் வில்லியம்சன் மற்றும் பல அனுபவம் வாய்ந்த வீரர்களிடம் அவர் தானே சென்று அட்வைஸ் பெற்று கடைபிடிக்கிறார். ” என்றார் சவுதி.
2023 உலகக் கோப்பையின் பயிற்சி ஆட்டத்தில் துவக்க வீரராக களமிறங்கி ரச்சின் ரவீந்திரா சிறப்பான ஆட்டத்தை வெளிக்காட்டி 97 ரன்கள் விளாசினார். அதன் பின்னர் கேன் வில்லியம்சன் இடத்தில் அவருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்பை மிகச் கச்சிதமாகப் பயன்படுத்தி ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகையே திரும்பிப் பார்க்க வைத்தார். 10 இன்னிங்சில் 2 சதம், 3 அரை சதம் உட்பட மொத்தம் 578 ரன்கள் குவித்து பேசுபொருளாக மாறினார்.
அதனுடன் தொடர்ந்து நியூசிலாந்து அணியில் இடம்பிடித்து, அடுத்த தலைமுறை வீரர்களில் முக்கியமான வீரராக உயர்ந்துள்ளது ரச்சின் ரவீந்திரா. உலகக் கோப்பையில் கேன் வில்லியம்சனுக்கு நடந்த சோகம், ரச்சினின் வாழ்க்கையை மாற்றியுள்ளது. வாய்ப்புக் கிடைத்தால், அதை ரச்சின் பயன்படுத்தியது போல பயன்படுத்தி முன்னேற வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்கிறார்.

