இந்தியா, தென்னாப்பிரிக்கா அணிகளுக்கிடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்று 2-1 என்ற கணக்கில் தொடரையும் கைப்பற்றியுள்ளது. இந்தப்
போட்டியில் சதம் அடித்த சஞ்சு சாம்சன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
முன்னதாக இவ்விரு அணிகளும் தலா ஒரு போட்டியில் வெற்றி பெற்று சமமாக இருந்த நிலையில் தொடரை நிர்ணயிக்கும் போட்டி போலந்து பார்க் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.
இந்திய அணியில் கெய்க்வாட்டிற்கு ஓய்வு அளிக்கப்பட்டு ரஜத் பட்டிதார் களமிறங்கினார். அதன்படி சாய் சுதர்சன், ரஜத் பட்டிதாருடன் இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணி 34 ரன்களுக்குள் முதல் விக்கெட்டை பறி கொடுத்தது. அடுத்து களம் இறங்கிய சஞ்சு சாம்சன் அபாரமாக விளையாடினார். அவருக்கு ராகுல், திலக் வர்மா மற்றும் ரிங்கு சிங் என ஒத்துழைப்பு அளிக்க 114 பந்துகளில் 108 ரன்கள் குவித்தார்.
மேலும் திலக் வர்மா சிறப்பாக விளையாடி 52 ரன்கள் குவித்தார். அதிரடியாக விளையாடிய ரிங்கு சிங் 27 பந்துகளில் 38 ரன்கள் குவித்தார். இதன் மூலம் இந்திய அணி 50 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 296 குவித்தது. பந்துவீச்சில் தென்னாப்பிரிக்க அணியின் ஹென்றிக்ஸ் 3 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
பின்னர் விளையாடிய தென்னாபிரிக்கா அணி 218 ரன்களுக்குள் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து ஆல் அவுட் ஆனது. அந்த அணியின் டோனி டி ஜார்ஜி சிறப்பாக விளையாடி 81 ரன்கள் குவித்தார். அணியின் கேப்டன் மார்க்ரம் 36 ரன்கள் விளாசினார். அவரைத் தவிர யாரும் பெரிதாக சொல்லிக் கொள்ளும்படி விளையாடவில்லை.
இதனால் இந்திய அணி 78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இந்திய அணித் தரப்பில் ஹர்ஸ்தீப்சிங் சிறப்பாக பந்து வீசி 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். இந்தப் போட்டியில் அபார சதம் அடித்த சாம்சன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.
இது குறித்து பேசிய சஞ்சு சாம்சன்,
“ஆட்டத்தின் முடிவு பாசிட்டிவ் ஆக அமைந்ததில் பெருமைப்படுகிறேன். நான் சதம் அடித்ததில் மிக்க மகிழ்ச்சி. இதற்காக நான் இந்த இரண்டு மாதங்கள் மட்டும் இல்லாமல் நிறைய உழைத்திருக்கிறேன். தற்போது நல்ல முடிவு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஒருநாள் தொடரைப் பொறுத்தவரை ஆட்டத்தின் சூழ்நிலை மற்றும் பந்துவீச்சாளர்களின் மனநிலையை புரிந்து கொள்ள போதிய அவகாசம் உள்ளது.
டாப் ஆர்டரில் இறங்கி பேட்டிங் செய்வது கூடுதலாக 10 முதல் 20 பந்துகளை வழங்குகிறது. இது ஆட்ட சூழ்நிலையைப் புரிந்து சிறப்பான அடித்தளத்தை அமைக்கப் பெரிதும் உதவுகிறது. திலக் வர்மாவின் முன்னேற்றம் குறித்து முழு நாடும் பெருமை கொள்கிறது. இதுபோல தரமான இன்னிங்ஸ்களை அடுத்து வரும் தொடர்களில் இருந்து அவரிடம் எதிர்பார்க்கலாம். இதற்கு முன்னால் விளையாடிய சீனியர் வீரர்கள் இந்திய கிரிக்கெட் தரத்தை நிர்ணயித்துச் சென்று விட்டனர். தற்போது ஜூனியர் வீரர்கள் அதற்கு தகுந்தவாறு வேலை செய்கிறார்கள்.
வெவ்வேறு இடங்களுக்கு பயணம் செய்து, ஒவ்வொரு இரண்டு முதல் மூன்று நாட்களுக்கு ஒரு முறை விளையாடி தங்கள் வேலையை சிறப்பாக ஜூனியர் வீரர்கள் செய்கிறார்கள். இது அவ்வளவு எளிதானது அல்ல” என்று கூறி இருக்கிறார்.

