இன்று இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரில் தனது இரண்டாவது போட்டியில் நமிபியா அணிக்கு எதிராக 93 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணிக்கு இஷான் கிஷான் 24 பந்தில் 61 ரன்கள் ஹர்திக் பாண்டியா 28 பந்தில் 52 ரன்கள் எடுத்தார்கள். இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 209 ரன்கள் எடுத்தது. இதைத் தொடர்ந்து விளையாடிய நமிபியா அணி 18.2 ஓவரில் 116 ரன் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணியில் வருண் சக்கரவர்த்தி மூன்று மற்றும் ஹர்திக் பாண்டியா அக்சர் படேல் தலா இரண்டு விக்கெட்டுகள் கைப்பற்றினார்கள்.
இதுகுறித்து சூரியகுமார் யாதவ் பேசும்பொழுது ” இந்த போட்டிக்கான ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு எளிதானது இல்லை. ஆனால் இஷான் கிஷான் விளையாடிய விதத்தை பார்க்கும் பொழுது ஆடுகளம் எளிதாக இருப்பது போல் தோன்றியது. நான் பேட்டிங் செய்ய செல்லும் பொழுது தான் தெரிந்தது ஆடுகளத்தில் பந்து நின்று வருகிறது என்று. ஆனால் எங்கள் தொடக்க ஆட்டக்காரர்கள் அருமையான முறையில் தொடங்கினார்கள். அதற்கு அடுத்து நாங்கள் விக்கெட்டுகளை சீக்கிரத்தில் இழந்தாலும், துபே மற்றும் ஹர்திக் பாண்டியா சிறந்த பார்ட்னர்ஷிப்பை கொண்டு வந்தார்கள்”
“மேலும் நமிபியா அணி பந்துவீச்சாளர்களை நாம் பாராட்டாமல் இருக்க முடியாது. அவர்கள் சிறப்பான திட்டங்களை கொண்டு வந்து அதை சிறப்பாக செயல்படுத்தினார்கள். அக்சர் படேல் மற்றும் வருண் சக்கரவர்த்தி இணைந்து பந்து வீசும் போது அது சிறப்பான ஜோடியாக இருக்கிறது. மேலும் பும்ரா நான்கு ஓவர்கள் முழுதாக பேசியது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் அடுத்த போட்டிக்கு தயாராக இருக்கிறார். ஹர்திக் பாண்டியா அதிரடியான பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என எல்லா பக்கத்திலும் சிறப்பாக இருக்கிறார். மேலும் இதுவரை விஷயங்கள் சென்ற விதத்தில் மகிழ்ச்சியாக இருக்கிறேன். அடுத்த சுற்றுக்கு நாம் இன்னும் சிறப்பாக மாற வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

