இந்த டி20 உலக கோப்பை தொடரின் இரண்டாவது செமி பைனலில் இந்திய அணி நேற்று இங்கிலாந்து அணியை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த போட்டியில் வெற்றிக்கான காரணங்கள் குறித்து கேப்டன் சூர்யா குமார் யாதவ் பேசியிருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் பொழுது “இந்தியாவில் விளையாடுவதும், இவ்வளவு பெரிய அணியை வழிநடத்துவதும் மிகச் சிறந்த உணர்வு. மேலும் இந்த போட்டியில் வெற்றி பெற்று நாங்கள் இறுதி போட்டியில் விளையாடுவதற்கு அகமதாபாத் செல்கிறோம் என்பது ஒட்டுமொத்த வீரர்களுக்கும் மிகச் சிறந்த உணர்வு”
“சாம்சன் நேற்று பேட்டிங் செய்ய வந்த பொழுதே ஆடுகளம் பேட்டிங் செய்ய சாதகமாக இருந்ததை உணர்ந்து தொடர்ந்து அதிரடியாக விளையாடினார். அவருக்கு என்ன செய்ய வேண்டும் என்பது தெளிவாகத் தெரிந்தது. பும்ரா இந்திய அணிக்காக பல வருடங்களாக என்ன செய்து வந்தாரோ அதையே நேற்றும் செய்தார். போட்டியை அவர்களிடமிருந்து பறித்து விட்டார்”
“மேலும் நான் இங்கிலாந்து கேப்டன் ஹாரி புரூக்கிடம் இன்னும் நாங்கள் எவ்வளவு ரன்தான் எடுப்பது என்று கேட்டேன். 250 ரன்னை துரத்தும் பொழுது அவர்கள் மிகச் சிறப்பான போராட்டத்தை வெளிப்படுத்தி போட்டியில் தொடர்ந்து இருந்தார்கள். இதற்கான கௌரவத்தை நாம் அவர்களுக்கு வழங்க வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

