தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் இந்திய அணி 106 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்தப் போட்டியின் போது சூரியகுமார் யாதவும் பில்டிங் செய்தார்.
அப்போது அவருடைய காலில் காயம் ஏற்பட்டதும் இதனால் போட்டியிலிருந்து பாதியில் சூரியகுமார் யாதவ் விலகினார். இதனை அடுத்து துணை கேப்டன் ஜடேஜா அணியை வழிநடத்தினார்.
இந்த நிலையில் வெற்றிக்கு பிறகு கேப்டன் என்ற முறையிலும் ஆட்டநாயகன் என்ற விருதையும் வாங்குவதற்காக சூரியகுமார் யாதவ் கொஞ்சம் தடுமாறியே நடந்து வந்தார்.அப்போது பேசிய சூரியகுமார் யாதவ், நான் நன்றாக இருக்கிறேன். என்னால் நடக்க முடிகிறது.
என்னுடைய காயம் ஒன்றும் அந்த அளவுக்கு மோசமாக அமையவில்லை. சதம் அடித்தது மகிழ்ச்சி அளிக்கிறது. குறிப்பாக வெற்றி பெறும் போட்டியில் நான் சதம் அடித்தது உற்சாகத்தை கொடுக்கிறது. நாங்கள் டி20 கிரிக்கெட்டில் பயமறியா கிரிக்கெட்டை விளையாட நினைத்தோம்.
அதை இந்த தொடரில் செய்தது மகிழ்ச்சி அளிக்கிறது. எங்கள் அணி வீரர்கள் அனைவரும் தங்களுடைய திறனையும் இயல்பையும் வெளிகாட்டினார்கள். குல்தீப் யாதவ் எப்போதுமே மகிழ்ச்சியாக இருக்க மாட்டார்.அவர் மூன்று விக்கெட்டை எடுத்தாலும் சரி நான்கு விக்கெட்டுகளை எடுத்தாலும் சரி.
அவர் தன்னது பௌலிங் குறித்து திருப்தி அடைய மாட்டார். ஆனால் தற்போது பிறந்தநாள் அன்று ஐந்து விக்கெட்டுகளை வீழ்த்தி அவருக்கு அவரே பரிசு எடுத்துக் கொண்டார். எப்போதுமே எதையாவது சாதிக்க வேண்டும் என்ற உத்வேகத்துடன் குல்தீப் இருக்கிறார்.
எப்போதுமே நமது ஆட்டத்தின் பலம் என்ன என்பது குறித்து நாம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். என்னை பொறுத்தவரை நான் களத்திற்கு சென்று மகிழ்ச்சியாக இருக்க தான் முயற்சி செய்வேன் என்று சூரியகுமார் யாதவ் கூறினார்.
டி20 கிரிக்கெட்டில் கேப்டனாக சூரியகுமார் யாதவ் பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 4க்கு ஒன்று என்ற கணக்கிலும் தற்போது பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்கா அணியை அதன் சொந்த மண்ணில் ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கிலும் தொடரை முடித்திருக்கிறார். மேலும் கேப்டனாகவும் பேட்டிங்க சூரியகுமார் அசத்துகிறார். இதன் காரணமாக ஹர்திக் பாண்டியாவின் கேப்டன் வாய்ப்பு பறிபோக இருப்பதாக ரசிகர்கள் கிண்டல் அடித்து வருகிறார்கள்.

