இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 கிரிக்கெட் போட்டி இன்று இரவு நடைபெற உள்ளது. இதற்காக இரண்டு அணிகளும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். ஏற்கனவே ஒரு நாள் தொடரில் தோல்வியை தழுவி இருக்கும் இந்திய அணி இந்த தொடரில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது.
இதற்குப் பிறகு டி20 உலக கோப்பை வர உள்ளதால் மிகவும் நம்பிக்கையோடு உலகக் கோப்பைத் தொடருக்கு செல்ல வேண்டும் என்பதால் இந்த தொடரை இந்திய அணி வெற்றிகரமாக முடிக்கும் என்று எதிர்பார்க்கலாம். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் கேப்டன் சூர்யா குமார் யாதவ் பேட்டங்கில் மோசமான பார்மை வெளிப்படுத்திக் கொண்டிருக்கிறார். எனவே இந்த தொடரில் அவர் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “ஒரு தொடரின் ஒவ்வொரு போட்டியும் எங்களுக்கு மிகவும் முக்கியம். அதிலிருந்து நல்ல விஷயங்களை நாங்கள் எடுத்துக் கொள்ள விரும்புகிறோம். எனது பேட்டிங் குறித்து கூற வேண்டும் என்றால் நான் வலைகளில் நன்றாக பேட்டிங் செய்து வருகிறேன். எனவே விரைவாக ரன்கள் வரும் என்கிற நம்பிக்கை உள்ளது. இதற்காக நான் என்னுடைய பேட்டிங் ஸ்டைலை மாற்றப் போவதில்லை. கடந்த மூன்று நான்கு வருடங்களாக இந்த ஸ்டைல் தான் எனக்கு வெற்றிகளை பெற்றுக் கொடுக்கிறது. அதனால் நான் எதையும் மாற்றப் போவது கிடையாது இதே வழியில் ரன்கள் வந்தால் பிரச்சனை இல்லை. ஒரு வேலை வரவில்லை என்றால் நான் மீண்டும் கடுமையான பயிற்சி மேற்கொள்வேன்” என்று பேசியிருக்கிறார்.

