இந்திய அணியின் நடப்பு இளம் நட்சத்திர வீரர் என்றால் அது யஷஸ்வி ஜெய்ஸ்வால் தான். 2024 ஆம் ஆண்டு பேட்டிங்கில் இந்தியாவுக்கு அதிக ரங்களைக் குவித்த வீரராக இவர் திகழ்ந்துள்ளார். ஜெய்ஸ்வாலின் இந்த பயணத்தில் கேப்டன் ரோஹித் ஷர்மா மிக முக்கிய பங்காற்றியதாக முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.
அடுத்த மாதம் பிப்ரவரி 19 முதல் மார்ச் 9 வரை பாகிஸ்தானில் சாம்பியன்ஸ் டிராபி தொடர் நடக்கிறது. இதற்கான இந்திய அணி கடந்த வாரம் அறிவிக்கப்பட்டது. 2023 உலகக் கோப்பை என்னதான் இந்திய அணிக்குச் சாதகமாக அமையவில்லை என்றாலும் தொடர் முழுக்க இந்திய அணியின் ஆதிக்கத்தை சொல்ல வார்த்தைகளல்ல.
அதனால் கேப்டன் ரோஹித் ஷர்மா தலைமையிலான அதே வலுவான இந்திய அணியை மீண்டும் தக்க வைத்துள்ளது பிசிசிஐ. துவக்க ஆட்டக்காரர்களாக ரோஹித் ஷர்மா – கில் தொடர்கிறார்கள். மூன்றாவது ஒப்னராக அணியில் ஜெய்ஸ்வால் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இன்னும் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகாத ஜெய்ஸ்வால் உடனே பெரிய தொடரில் இடம் பெற்றுள்ளது அவரின் திறனின் மேல் பிசிசிஐ வைத்திருக்கும் நம்பிக்கையைக் காட்டுகிறது.
இது பற்றி முன்னாள் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னா பேசியிருப்பதாவது, ” ஜெய்ஸ்வால் தற்போது ரன் அடிக்கும் பசியில் இருக்கிறார். இந்திய தேர்வாளர்கள், முக்கியமாக ரோஹித் சர்மாவுக்கு மிகப் பெரிய சல்யூட். ஒருநாள் போட்டியில் இதுவரை விளையாடாத ஜெய்ஸ்வாலை, அவரின் திறமை, கடின உழைப்பை வைத்து சாம்பியன்ஸ் டிராபிக்கு அழைத்துச் செல்கிறார். “
” ஜெய்ஸ்வால் அனைத்திற்கும் தயாராக இருப்பது போல் தெரிகிறார். இது தான் இந்திய கிரிக்கெட்டின் அழகு. நீங்கள் கடின உழைப்போடு இந்திய அணிக்கு பங்காற்ற வேண்டுமென்ற நோக்கில் இருந்தால், ஒரு சக்தி உங்களை அழைத்துச் செல்லும். ஜெய்ஸ்வாலுக்கு அதை ரோஹித் ஷர்மா செய்துள்ளார். ” என இந்தியக் கேப்டனைப் புகழ்ந்துள்ளார் ரெய்னா.

