2027 ஐபிஎல் தொடருக்கு டெல்லி கேபிடல்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக சவுரவ் கங்குலி நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் ஐபிஎல் தொடரில் முதல்முறையாக ஒரு அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பை கங்குலி ஏற்கிறார். கடந்த இரண்டு சீசன்களாக அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஹேமங் பதானிக்கு பதிலாக அவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
கங்குலிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் நீண்ட கால தொடர்பு உள்ளது. 2019ஆம் ஆண்டு அணியின் ஆலோசகராக இணைந்த அவர், பின்னர் ஆண்கள் மற்றும் பெண்கள் அணிகளின் கிரிக்கெட் இயக்குநராகவும் பணியாற்றியுள்ளார். 2026 ஐபிஎல் தொடரில் டெல்லி அணி 6வது இடத்தை பிடித்து பிளேஆஃப் வாய்ப்பை இழந்த நிலையில், புதிய பயிற்சியாளராக கங்குலி களமிறங்குகிறார்.
இது குறித்து கங்குலி கூறும்போது, “டெல்லி கேபிடல்ஸ் அணி எனது மனதுக்கு மிகவும் நெருக்கமான அணி. அணியின் உரிமையாளர்கள், நிர்வாகம், உதவி ஊழியர்கள் மற்றும் வீரர்களுடன் பல ஆண்டுகளாக நெருக்கமாக பணியாற்றியுள்ளேன். புதிய சீசனில் அணியுடன் இணைந்து வலுவான மற்றும் அச்சமற்ற அணியை உருவாக்க ஆவலுடன் இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

