வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் இந்திய அணி 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 247 ரன்கள் குவித்த நிலையில், 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 223 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதனால் ஐந்து போட்டிகள் கொண்ட தொடர் 2-2 என சமநிலையை எட்டியது.
இந்தப் போட்டியில் சஞ்சு சாம்சன் அதிரடியாக விளையாடி 56 ரன்கள் எடுத்துக் கொடுத்தும், மற்ற பேட்டர்கள் அந்தத் தொடக்கத்தைச் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை. இதனால் இந்திய அணியின் சேஸிங் அணுகுமுறை குறித்து முன்னாள் இந்திய கேப்டன் சுனில் கவாஸ்கர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து கவாஸ்கர் கூறும்போது, “இந்திய அணி முதலில் மேம்படுத்த வேண்டியது இலக்கைத் துரத்தும் விதத்தைத்தான். பேட்டிங் அணியினர் அதிக பொறுப்புடன் விளையாட வேண்டும். பேட்டர்கள் பொறுப்பை ஏற்கவில்லை என்றால் இந்த இந்திய அணியால் வெற்றி பெற முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

