பத்து ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அணியை டெஸ்ட் தொடரில் வீழ்த்தி ஆஸ்திரேலிய அணி பார்டர் கவாஸ்கர் டிராபியைக் கைப்பற்றியுள்ளது. கடந்த 2 முறை சொந்த மண்ணிலேயே மண்ணைக் கவ்விய ஆஸ்திரேலிய இம்முறை பேட் கம்மின்ஸ் தலைமையில் துவக்கத்தில் சரிவைச் சந்தித்து இருந்தாலும், மீண்டு வந்து 3-1 என கம்பேக் கொடுத்து அசத்தியது.
இந்தத் தொடரில் இந்திய அணியின் ஆட்டம் மிகக் குறைவாகத் தென்பட்டது. பவுலர் பும்ரா தவிர அனைவரும் பெரும் விமர்சனங்களுக்குத் தள்ளப் பட்டுள்ளனர். குறிப்பாக இந்திய அணியின் சீனியர் வீரர்கள் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலி. இவர்கள் இருவரின் ஆட்டமும் 2024ஆம் ஆண்டில் டெஸ்ட்டில் மிக மோசமாக இருந்துள்ளது.
கடந்த 15 டெஸ்ட் இன்னிங்சில் ரோஹித் ஷர்மா வெறும் 10 சராசியில் விளையாடியதோடு நியூசிலாந்து தொடர் தோல்வி, ஆஸ்திரேலியாவுடன் 2 தோல்வி என பேட்டிங், கேப்டன்சி இரண்டிலும் சரியான பார்மில் இல்லை. இதனால் 5வது டெஸ்ட்டில் தானே விலகி கேப்டன் பதவியை பும்ராவிடம் கொடுத்தார். மீண்டும் இந்திய அணியை ரோஹித் வழி நடத்துவாரா என்பதே பெரிய கேள்வியாக இருக்கிறது.
மறுபக்கம் விராட் கோலி முதல் டெஸ்ட்டில் அடித்த சதம் தவிர வேறு எதுவுமே பெரிதாகச் செய்யவில்லை. தொடர்ச்சியாக ஒரே மாதிரி ஆஃப் சைட் பந்துகளுக்கு பலியாவதோடு இந்த ஆண்டு அவரின் சராசரி வெறும் 25ஆக மட்டுமே இருக்கிறது. இந்த 2 சீனியர் வீரர்களும் அணியில் இருப்பது தேவையற்றது என ரசிகர்களே பேசத் துவங்கிவிட்டனர். இது பற்றி முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் பேசியுள்ளார்.
அவர் கூறியதாவது, ” அடுத்த 8-10 நாட்கள் இந்திய அணிக்கு மிகவும் முக்கியமானது, எங்கு பிரச்சினை என ஆராய்ந்துப் பார்க்க வேண்டும். மிக முக்கியமாக ஸ்டார் கலாச்சாரம் ஒழிக்கப்பட வேண்டும். ஒவ்வொரு வீரரும் முழு அர்ப்பணிப்புடன் இருப்பது நிராகரிக்க முடியாத ஒன்று. மருத்துவ அவசரம் தவிர வேறு எந்தக் காரணத்திற்காகவும் விலகக் கூடாது. “
” இங்கு கொஞ்ச நேரம் எங்கு கொஞ்ச நேரம் என இருக்கும் வீரர்களை தேர்வுக்கே கருதக் கூடாது. ஸ்டார் வீரர்களை ரசிப்பதை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் நிறுத்திவிட்டு, வீரர்களை முழு அர்ப்பணிப்போடு இருந்தால் மட்டுமே அனுமதிப்போம் என்ற நிலைக்கு வர வேண்டும். ஒன்று கிரிக்கெட் அல்லது மற்றவை, இரண்டையும் ஒரே சமயத்தில் பார்க்க விரும்பும் வீரர்களுக்கு இடம் மறுக்கப்பட வேண்டும். ” என சுனில் கவாஸ்கர் கூறியுள்ளார்.

