இந்திய கிரிக்கெட் அணிக்கு தென்ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் தோல்வி அடைந்துள்ள நிலையில் தலைமை பயிற்சியாளராக இருக்கும் கௌதம் கம்பீர் மீது பல்வேறு விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இந்த சூழ்நிலையில் இதுகுறித்து இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் ரவி சாஸ்திரி அவருக்கு ஆதரவாக சில கேள்விகளை எழுப்பி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறும் போது “இந்திய அணி தென்னாபிரிக்க அணிக்கு எதிராக தோல்வி அடைந்திருக்கும் போது முழு பொறுப்பு கௌதம் கம்பீர் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்கிற ரீதியில் பேசுகிறீர்களே. இதே கம்பீர் தலைமையில் ஆசிய கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி கோப்பைகள் கொடுத்த போது இவர் தான் முழு காரணம் என்று கூறினீர்களா?. அல்லது இனி டி20 மற்றும் ஒருநாள் வடிவத்திற்கு இவர் தான் வாழ்நாள் பயிற்சியாளர் என்று சொல்லி இருக்கிறீர்களா?
இப்படி எதுவுமே சொல்லாத பட்சத்தில் இதற்கு மட்டும் ஏன் இவரை பொறுப்பேற்க வேண்டும் என்று கூறுகிறீர்கள். சிவப்பு பந்து கிரிக்கெட்டுக்கு முதலில் இங்கிலாந்து அணிக்கு மெக்கல்லம் பயிற்சியாளராக வந்தார். அதற்குப் பிறகுதான் வெள்ளைப் பந்து கிரிக்கெட்டுக்கு பயிற்சியாளராக மாறினார். ஆனால் அங்கு திட்டங்கள் பலனளிக்கவில்லை. இருப்பினும் அவர்தான் தற்போது பயிற்சியாளராக தொடர்ந்து கொண்டிருக்கிறார். யாரும் எதுவும் சொல்லவில்லை” என்று அவர் பேசி இருக்கிறார்.

