இந்திய அணியின் முதன்மையான டெஸ்ட் கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியோடு தனது ஓய்வினை அறிவித்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் அஸ்வின் எடுத்தது தவறான முடிவு என்று அதற்கான காரணத்தை இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார்.
இந்திய கிரிக்கெட் அணியின் சிறந்த சுழற்பந்துவீச்சாளராக திகழ்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடர்ந்து தனது சிறந்த பங்களிப்பை வெளிப்படுத்தி வந்தார். இந்த சூழ்நிலையில் அஸ்வின் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்றாவது போட்டி முடிவடைந்த பிறகு தனது ஓய்வினை அறிவித்திருக்கிறார். மேலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டு டெஸ்ட் போட்டிகள் மீதம் இருக்கும் நிலையில் அஸ்வின் தனது ஓய்வு முடிவை அறிவித்தது ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏனென்றால் அடுத்த போட்டி மெல்போனிலும் அதற்கு அடுத்த போட்டி சிட்னி மைதானத்திலும் நடைபெற உள்ள நிலையில் சிட்னி மைதானம் சுழல் பந்து வீச்சுக்கு எப்போதுமே ஆதரவாக திகழக் கூடியது. இந்த நிலையில் முன்னணி வீரர் ஒருவர் ஓய்வினை அறிவித்திருப்பது அது இந்திய அணிக்கு சற்று பின்னடைவாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் அஸ்வின் எடுத்தது தவறான முடிவு என்று சில கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இது குறித்து அவர் கூறும் பொழுது “ரவிச்சந்திரன் அஸ்வின் எடுத்தது தவறான முடிவு என்று நான் கூறுவேன். ஏனென்றால் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இன்னும் இரண்டு போட்டிகள் மீதம் இருக்கிறது. குறிப்பாக ஐந்தாவது போட்டி சிட்னி நகரில் நடைபெற உள்ளதால் அங்கு சுழற் பந்துவீச்சுக்கு அதிக ஆதரவு இருக்கும். மேலும் மெல்போன் ஆடுகளமும் ஓரளவு சுழலுக்கு ஒத்துழைக்கும் என்பதால் அஸ்வின் அது குறித்து சிறிது யோசித்து இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
ஏனென்றால் வீரர்களுக்கு ஏதேனும் காயம் நேர்ந்தால் ரிசர்வ் வீரர்களில் இருந்து விளையாடும் அணியை தேர்வு செய்ய முடியும். தோனி ஆஸ்திரேலியா தொடரின் இடையில் ஓய்வெடுத்த முடிவு வித்தியாசமான சூழ்நிலையில் வந்தது. மேலும் நீங்கள் தொடரின் முடிவையே பார்க்க விரும்புகிறீர்களே தவிர தொடரின் நடுவில் வெளியேறுவதை விரும்ப மாட்டீர்கள். ஒருவேளை அஸ்வினை விட வாஷிங்டன் சுந்தர் தற்போது முன்னணியில் இருக்கலாம். இருப்பினும் அஸ்வின் இந்திய அணிக்கு செய்த பங்களிப்பு என்பது மிகவும் மகத்தானது” என்று கூறி இருக்கிறார்.

