இந்தியா, தென் ஆப்பிரிக்கா அணிக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் ஆட்டம் மழையால் கைவிடப்பட்டிருந்த நிலையில், 2வது ஆட்டம் தொடங்குவதற்கு முன்பு வானம் சற்று மேக மூட்டத்துடன் காணப்பட்டது.
இந்நிலையில் டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த இந்தியாவுக்கு கில் மற்றும் ஜெய்ஸ்வால் வெளியேறி ஆரம்பமே அதிர்ச்சி அளிக்க, பின்னர் ஜோடி சேர்ந்த திலக் வர்மா, சூர்யா குமார் கூட்டணி சிறிது நேரம் தாக்குப் பிடித்தது. பின்னர் திலக் வர்மா 29 ரன்களில் வெளியேறினார். அடுத்து களமிறங்கிய ரிங்கு சிங் தனது வழக்கமான அதிரடியைத் தொடர்ந்தார்.
ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்கு ஓரளவு ஒத்துழைத்தது. 56 ரன்கள் குவித்து பேட்டிங் செய்து கொண்டிருந்த சூரியகுமார், சம்சியின் சுழற்பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். சூரியகுமார் யாதவின் விக்கெட்டைக் கொண்டாடும் விதமாக சம்சி அவரின் ஷூவை கழட்டி போன் செய்வது போல் காட்டினார்.
அவர் இம்மாதிரியான செயலை முன்னரே செய்திருந்தாலும், இது களத்தில் அவமரியாதை செய்யும் விதமாகவே தோன்றியது. இந்திய அணி 19.3 ஓவர்களில் 180 ரன்கள் குவித்திருந்த போது மழை குறுக்கிட்டு ஆட்டம் தடைபட்டது. பின்னர் டக்வொர்த் லீவிஸ் விதிப்படி, 15 ஓவர்களில் 152 ரன்கள் நோக்கி விளையாடிய தென் ஆப்பிரிக்கா அணியின் தொடக்க ஆட்டக்காரர் ஹென்றிக்ஸ் அபாரமாக விளையாடினார்.
அவருடன் ஜோடி சேர்ந்து விளையாடிய கேப்டன் மார்கம் தென் ஆப்பிரிக்காவின் வெற்றிக்கு உறுதுணையாக இருந்தார். பந்துவீச்சில் முக்கியப் பங்காற்றிய சம்சி ஆட்டநாயகன் விருது பெற்றார்.
வெற்றிக்குப்பின் அவ்வாறான கொண்டாட்டத்திற்கு விளக்கம் அளித்த சம்ஸி
“நான் அம்மாதிரியான கொண்டாட்டத்தை ஏற்கனவே நிறுத்தி வைத்திருந்தேன். ஆனால் குழந்தைகள் அதுபோல செய்யும் படி கேட்டுக் கொண்டிருந்தார்கள்.
அவர்களை ஏமாற்ற என் மனம் ஒத்துழைக்கவில்லை. அதனால்தான் அவ்வாறு செய்தேன். நான் தொடர்ந்து பந்தை சரியான இடத்தில் வீச முயற்சி செய்து கொண்டிருக்கிறேன். இந்தியாவுக்கு எதிரான என்னுடைய பந்துவீச்சு மகிழ்ச்சி அளிக்கிறது. கேப்டன் மார்க்ரம் களத்தில் அணிக்குத் தேவையான மாற்றங்களை செய்து கொண்டிருக்கிறார். சூரியகுமார் யாதவ் அற்புதமான வீரர். அவரது விக்கெட்டை எடுத்தது மகிழ்ச்சி அளிக்கிறது.
எங்கள் குடும்பத்தார் எங்களுடன் இருப்பது உத்வேகத்தை அளிக்கிறது. இதற்கு ராப் மட்டுமே முக்கிய காரணம். பணியில் தற்போது நேர்மறையான சூழலே நிலவுகிறது. நாங்கள் மிகவும் மகிழ்ச்சியாக விளையாடிக் கொண்டிருக்கிறோம். இனி வரும் ஆட்டங்களில் வெற்றிகளைப் பெற முயற்சிப்போம்” என்று கூறி இருக்கிறார். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் தென் ஆப்பிரிக்கா அணி தற்போது முன்னிலை வகிக்கிறது.

