இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாப்பிரிக்கா அணி 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்றுள்ளது. இந்த நிலையில் முதல் ஒருநாள் போட்டி லீட்ஸில் இங்கிலாந்து – தென்னாப்பிரிக்கா இடையில் தொடங்கியது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா கேப்டன் பவுமா பவுலிங்கை தேர்வு செய்தார்.
பேட்டிங்கை மறந்த இங்கிலாந்து
இங்கிலாந்து அணிக்காக ஜேமி ஸ்மித் – டக்கெட் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் டக்கெட் 5 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த ஜோ ரூட் 4 ரன்களில் ஆட்டமிழந்தார். இதனிடையே அதிரடியாக ஆடி ஜேமி ஸ்மித் 48 பந்துகளில் 54 ரன்களை விளாசி தள்ளினார். ஆனாலும் மறுமுனையில் நின்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் 107 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து மகாராஜ் சுழலில் சிக்கிய பெத்தல் 1 ரன்னிலும், ஜாக்ஸ் 7 ரன்களிலும், கார்ஸ் 3 ரன்களிலும், ஆர்ச்சர் டக் அவுட்டாகியும் வெளியேறினர். இதனால் 24.3 ஓவர்களில் இங்கிலாந்து அணி 131 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. சிறப்பாக பவுலிங் செய்த மகாராஜ் 4 விக்கெட்டுகளையும், முல்டர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
கொழுத்திவிட்ட மார்க்ரம்
இதன்பின் தென்னாப்பிரிக்கா அணி 132 ரன்கள் என்ற எளிய இலக்குடன் களமிறங்கியது. அந்த அணிக்கு மார்க்ரம் – ரிக்கல்டன் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இருவருமே அதிரடியாக ரன்களை குவித்தனர். அதில் எய்டன் மார்க்ரம் 55 பந்துகளில் 86 ரன்கள் எடுத்து அமர்க்களப்படுத்தினார். முதல் விக்கெட்டுக்கு 121 ரன்கள் சேர்த்த நிலையில், பின்னர் வந்த பவுமா 6 ரன்களில் வெளியேறினார்.
பின்னர் ஸ்டப்ஸ் டக் அவுட்டாகி வெளியேற, டிவால்ட் பிரெவிஸ் அதிரடியாக சிக்ஸ் விளாசி தென்னாப்பிரிக்கா வெற்றியை உறுதி செய்தார். இதன் மூலமாக தென்னாப்பிரிக்கா அணி 20.5 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்து அபார வெற்றியை பெற்றது. இதன் மூலமாக 1-0 என்ற கணக்கில் தென்னாப்பிரிக்கா ஒருநாள் தொடரில் முன்னிலைப் பெற்றுள்ளது.

