ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரின் 3வது நாள் போட்டியில் தென்னாப்பிரிக்கா – ஆஃப்கானிஸ்தான் அணிகள் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணியின் கேப்டன் பவுமா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய தென்னாப்பிரிக்கா அணி 50 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 315 ரன்களை குவித்தது.
சிறப்பாக ஆடிய ரிக்கல்டன் 106 பந்துகளில் 103 ரன்களும், கேப்டன் பவுமா 76 பந்துகளில் 58 ரன்களும், வான் டுர் டசன் 46 பந்துகளில் 52 ரன்களும், எய்டன் மார்க்ரம் 36 பந்துகளில் 52 ரன்களும் எடுத்து அசத்தினர். ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் முகமது நபி 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். தொடர்ந்து ஆஃப்கானிஸ்தான் அணி தரப்பில் குர்பாஸ் – ஜத்ரான் கூட்டணி தொடக்கம் கொடுத்தது.
ஆஃப்கான் ஏமாற்றம்
ஆஃப்கானிஸ்தான் அணி பெரிய இலக்கை சேஸ் செய்ய வேண்டுமென்றால் குர்பாஸ் ஆட்டம் மிகவும் முக்கியம். இதனையறிந்து குர்பாஸை தென்னாப்பிரிக்கா பவுலர்கள் அட்டாக் செய்தனர். இங்கிடி வீசிய 4வது ஓவரிலேயே குர்பாஸ் 10 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் வந்த ஜத்ரான் 17 ரன்களிலும், அடல் 16 ரன்களிலும், கேப்டன் ஷாகிதி டக் அவுட்டாகியும் வெளியேறினர்.
இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 50 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பின்னர் ரஹ்மத் ஷா – ஒமர்சாய் கூட்டணி நிதானமாக ரன்களை சேர்த்தது. 6வது விக்கெட்டுக்கு 39 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த போது, ஒமர்சாய் 18 ரன்கள் எடுத்து வெளியேறினார். தொடர்ந்து வந்த நபி 8 ரன்களிலும், குல்பிதின் நைப் 13 ரன்களிலும் வெளியேறினர்.
சதமடிப்பாரா ரஹ்மத் ஷா?
இதனிடையே அதிரடியாக ஆடிய ரஹ்மத் ஷா அரைசதம் கடந்து அசத்தினார். அதிகம் எதிர்பார்க்கப்பட்ட ரஷீத் கான் 18 ரன்களில் ஆட்டமிழக்க, ஆஃப்கானிஸ்தான் அணியின் தோல்வி கிட்டத்தட்ட உறுதியானது. இருந்தாலும் ரஹ்மத் ஷா சதமடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவரும் கடைசியாக 92 பந்துகளில் 90 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
இதனால் ஆஃப்கானிஸ்தான் அணி 43.3 ஓவர்களில் 208 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. ஆஃப்கானிஸ்தான் அணியின் 11 வீரர்களில் ஒருவரை தவிர்த்து மீதமுள்ள 10 பேட்ஸ்மேன்களும் 20 ரன்களை கூட தாண்டாமல் விக்கெட்டை பறிகொடுத்து ஆட்டமிழந்து வெளியேறி இருக்கின்றனர். இதனால் 107 ரன்கள் வித்தியாசத்தில் ஆஃப்கானிஸ்தான் அணி தோல்வியடைந்தது. இந்த தோல்வியால் ஆஃப்கானிஸ்தான் அணியின் அரையிறுதி வாய்ப்பு சந்தேகத்தை அளித்துள்ளது. ரபாடா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.

