டி20 உலக கோப்பை போட்டிகளுக்குப் பிறகு தென்னாப்பிரிக்கா அணி, வெஸ்ட் இண்டீஸ் தீவுகளில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் போட்டிகள் மற்றும் 3 டி20 போட்டிகளை கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் தென் ஆப்பிரிக்கா கைப்பற்றியது . இதனைத் தொடர்ந்து 3 போட்டிகளைக் கொண்ட டி20 தொடர் கடந்த 24ஆம் தேதி தொடங்கியது. இந்தத் தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி அதிரடியாக விளையாடி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று 1-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது.
இதனைத் தொடர்ந்து வெஸ்ட் இண்டீஸ் மற்றும் தென்னாப்பிரிக்க அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று அதிகாலை நடைபெற்றது. மேற்கிந்திய தீவுகளின் ட்ரினிடாட் நகரில் அமைந்துள்ள பிரையன் லாரா கிரிக்கெட் மைதானத்தில் வைத்து இந்த போட்டி நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற சவுத் ஆப்பிரிக்கா முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 179 ரன்கள் எடுத்து 6 விக்கெட் இழந்திருந்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணியின் துவக்க வீரர் சாய் ஹோப் சிறப்பாக விளையாடி 22 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரியுடன் 44 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து அந்த அணியின் கேப்டன் ரோமன் பவல் 22 பந்துகளில் 3 சிக்ஸர்கள் மற்றும் 1 பவுண்டரியுடன் 35 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். தென்னாப்பிரிக்கா அணியின் பந்துவீச்சில் வில்லியம்ஸ் 3 விக்கெட்டுகளும் பேட்ரிக் க்ரூகர் 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து 180 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய தென்னாப்பிரிக்க அணி துவக்கம் முதல் அதிரடியாக விளையாடியது. அந்த அணியின் துவக்க வீரர்கள் ரிக்கல்டன் மற்றும் ரிஷா ஹென்றிக்ஸ் இருவரும் பவர் பிளேவில் அதிரடியாக விளையாடினர். எனினும் 4 ஓவர்களில் 63 ரன்கள் சேர்த்திருந்த நிலையில் 13 பந்துகளில் 20 ரன்கள் எடுத்திருந்த ரிக்கல்டன் ஆட்டம் இழந்தார். இவரைத் தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த மற்றொரு துவக்க வீரரான ஹென்றிக்ஸ் 18 பந்துகளில் 2 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 44 ரன்கள் சேர்த்து இருந்த நிலையில் 6-வது ஓவரில் அவுட் ஆனார்.
எனினும் துவக்க வீரர்களின் அதிரடியால் தென்னாப்பிரிக்கா அணி 6 ஓவர்கள் முடிவில் 71 ரன்கள் சேர்த்திருந்தது. இதன் காரணமாக தென்னாப்பிரிக்கா எளிதாக வெற்றி பெறும் சூழ்நிலை இருந்தது. இவர்களைத் தொடர்ந்து ஆட வந்த கேப்டன் மார்க்ரம் 9 பந்துகளில் 19 ரன்கள் எடுத்து அவுட் ஆக தென்னாப்பிரிக்கா அணி 7.2 ஓவர்களில் 86 ரன்கள் எடுத்து 3 விக்கெட்டுகள் இழந்திருந்தது. இதனைத் தொடர்ந்து டிறிஸ்டன் ஸ்டப்சுடன் வாண்டெர் டுசன் ஜோடி சேர்ந்தார். இவர்கள் இருவரும் விக்கெட் இழக்காமல் பொறுப்புடன் ஆடி தென்னாப்பிரிக்கா அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.
இதனால் தென்னாப்பிரிக்கா அணி எளிதாக வெற்றியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்தது. எனினும் ஆட்டத்தின் 13.5 வது ஓவரில் போட்டியில் திருப்புமுனை ஏற்பட்டது. சிறப்பாக ஆடி வந்த டிறிஸ்டன் ஸ்டப்ஸ் 24 பந்துகளில் 1 சிக்சர் மற்றும் 1 பவுண்டரியுடன் 28 ரன்களில் ஆட்டம் இழந்ததை தொடர்ந்து போட்டி தலைகீழாக மாறியது. இதனைத் தொடர்ந்து தென்னாப்பிரிக்கா அணியின் விக்கெட்டுகள் வேகமாக சரிந்தன. வாண்டெர் டுசன் 17 ரன்களிலும் பெரேரா 4 ரன்களிலும் ஆட்டம் இழக்க போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆதிக்கம் தொடங்கியது.
இவர்களைத் தொடர்ந்து களம் இறங்கிய வீரர்களும் ஒற்றை இலக்க ரன்களில் அவுட் ஆக தென்னாப்பிரிக்கா அணி 19.4 ஓவர்களில் 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இதன் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் அணி 30 ரன்களில் வெற்றி பெற்றதோடு தொடரையும் கைப்பற்றியது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்துவீச்சில் ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் சமார் ஜோசப் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
ஒரு கட்டத்தில் 129 ரன்களுக்கு 3 விக்கெட்டுகள் மட்டுமே இழந்திருந்த தென்னாப்பிரிக்கா அணி 149 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகி அதிர்ச்சி தோல்வி அடைந்திருக்கிறது. அந்த அணி தனது கடைசி 7 விக்கெட்டுகளை வெறும் 20 ரன்களுக்கு இழந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது. கடந்த ஜூன் மாதம் வெஸ்ட் இண்டீஸ் தீவுகளில் நடைபெற்ற டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியிலும் தென்னாப்பிரிக்கா இந்திய அணிக்கு எதிராக வெற்றி பெறும் நிலையில் இருந்தது.
எனினும் கடைசி 24 பந்துகளில் 26 ரன்கள் தேவை என்ற நிலையில் அந்த அணி 18 ரன்கள் மட்டுமே சேர்த்து 4 விக்கெட் இழந்து டி20 உலக கோப்பை பைனலில் தோல்வி அடைந்தது. நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியிலும் தென்னாப்பிரிக்கா வெற்றி பெறும் சூழலில் இருந்து மீண்டும் தனது வாய்ப்பை இழந்திருப்பது அந்நாட்டு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

