நாளை இந்திய அணி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இரண்டாவது சுற்று முதல் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. இந்த இரண்டு அணிகளுமே தங்களது முதல் சுற்றில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் இரண்டாவது சுற்றுக்கு முன்னேறி வந்திருக்கின்றன. இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க அணியின் தலைமை பயிற்சியாளர் சுக்ரி கான்ராட் இந்திய அணியை ஒரு லட்சத்து 30 ஆயிரம் மக்கள் முன்னால் வெற்றி பெற்று காட்டுவோம் என்று சவால் விட்டு பேசி இருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசும் பொழுது “முதலில் நாம் ஒரு விஷயத்தை தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும். ஒரு பெரிய அணிக்கு எதிராக விளையாடும் பொழுது நிறைய விமர்சனங்கள் மற்றும் ஆய்வுகள் இருந்து கொண்டேதான் இருக்கும். இதைத் தாண்டி நீங்கள் பார்க்கும் பொழுது சொந்த மண்ணில் உலகக் கோப்பையை விளையாடுகின்ற காரணத்தினால் இந்திய அணி அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றே ஆக வேண்டிய அழுத்தத்தில் உள்ள ஒரு அணி. நாங்கள் இந்த அழுத்தத்தை அம்பலப்படுத்தி அவர்களை வெற்றி பெறுவோம்”
“மேலும் இந்தியாவுக்கு எதிராக நாங்கள் சமீபத்தில் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி இருந்தோம். இதில் எங்களுக்கு பலதரப்பட்ட அனுபவங்கள் கிடைத்திருக்கிறது. மிகக்குறிப்பாக லட்சக்கணக்கான மக்கள் முன்னால் எப்படி விளையாடுவது என்று எங்களுக்கு தெரியும். நாளை ஒரு லட்சத்து 30 ஆயிரம் மக்கள் நீலக்கடல் போல குஜராத் அகமதாபாத் மைதானத்திற்கு வருவார்கள். அவர்கள் முழுக்க முழுக்க இந்தியாவுக்கு ஆதரவாக இருப்பார்கள். ஆனால் எங்களுக்கு கிடைத்திருக்கும் அனுபவத்தை வைத்து நாங்கள் இதைத் தாண்டி இந்திய அணியை தோற்கடிப்போம்” என்று கூறியிருக்கிறார்.

