சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி நேற்று ஓய்வை அறிவித்தார். இதுதொடர்பாக விராட் கோலி, கடினமான முடிவாக இருந்தாலும், இதுதான் சரியான முடிவு என்று கருதுவதாக தெரிவித்திருந்தார். ஆனால் விராட் கோலி மற்றும் பிசிசிஐ இடையிலான மோதல் காரணமாகவே, அவர் ஓய்வை அறிவித்ததாக கூறப்படுகிறது.
ஏனென்றால் விராட் கோலி சமீப காலமாக ஃபார்மில் இல்லை. ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கூட ஒரேயொரு சதத்தை கடந்து, ஒரு அரைசதம் கூட விராட் கோலியால் அடிக்க முடியவில்லை. அதேபோல் புதிய கேப்டனாக பும்ரா அல்லாமல் சுப்மன் கில்லை நியமிப்பதிலும் விராட் கோலிக்கு சில கருத்து வேறுபாடு இருந்ததாக கூறப்படுகிறது.
வாழ்த்தாத கங்குலி
இதனால் விராட் கோலி எந்தவித முடிவுகளிலும் ஆர்வம் காட்டாமல், உடனடியாக ஓய்வை அறிவித்திருக்கிறார். விராட் கோலியின் ஓய்வு அறிவிப்பு வெளியான பின், சச்சின் டெண்டுல்கர் தொடங்கி இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா ஜாம்பவான்கள் கூட வாழ்த்து கூறி வருகின்றனர். ஹசிம் ஆம்லா, டேவிட் வார்னர் ஆகியோரின் பதிவு ரசிகர்களிடையே அதிகமாக பகிரப்பட்டு வந்தது.
இந்த சூழலில் இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சவுரவ் கங்குலி மட்டும் விராட் கோலியின் ஓய்வு முடிவுக்கு இதுவரை வாழ்த்து கூறவில்லை. விராட் கோலிக்கு பின் ஓய்வு பெற்ற ரோஹித் சர்மாவை சிறந்த கேப்டன் என்று வாழ்த்தி இருக்கிறார். ஆனால் விராட் கோலிக்காக கங்குலி ஒரு பதவினை கூட எழுதவில்லை. இதனால் கங்குலி – விராட் கோலி இடையே மோதல் இருப்பது உறுதியாகி இருக்கிறது.
கங்குலி – விராட் கோலி
பிசிசிஐ தலைவராக கங்குலி இருந்த போது, இந்திய அணியின் கேப்டன் பதவியில் இருந்து விராட் கோலி நீக்கப்பட்டார். ஒருநாள் மற்றும் டி20 கேப்டனாக ரோஹித் சர்மாவை கொண்டு வர விரும்பினார். இதனால் விராட் கோலிக்கு கருத்து வேறுபாடு எழுந்தது. இதன்பின் டெஸ்ட் கேப்டன்சியில் இருந்து விராட் கோலி விலகினார்.
வேறு வழியின்றி டெஸ்ட் கிரிக்கெட்டுக்கும் ரோஹித் சர்மா தலைமையேற்க, விராட் கோலி சாதாரண வீரராக மட்டுமே விளையாடி வந்தார். இவர்கள் இருவருக்கும் இடையில் மோதல் இருந்து வந்தாலும், ஐபிஎல் தொடரின் போது கைகுலுக்கி வந்தனர். தற்போது விராட் கோலி ஓய்வை அறிவித்த போதும், கங்குலி வாழ்த்தாதது கூடுதல் சர்ச்சையை உருவாக்கி இருக்கிறது.

