பரபரப்பாக நடந்துக் கொண்டிருக்கும் பார்டர் கவாஸ்கர் டிராபியில் முதல் 2 ஆட்டங்கள் முடிந்துள்ளன. முதல் போட்டியை இந்திய அணி எந்த அளவு ஆதிக்கம் செலுத்தி வென்றதோ அதே போல 2வது போட்டியை ஆஸ்திரேலியா வென்று 1-1 என தொடர் சமநிலையில் உள்ளது.
இரண்டாவது டெஸ்ட் போட்டியில் அனல் பறக்கும் நிகழ்வு சமூக வலைதளம் மற்றும் கிரிக்கெட் வட்டாரங்களில் மிகவும் வைரலாக பேசப்பட்டது. இரு பெரிய அணிகள் மோதும் பொது இவ்வாறு எதேனும் நடந்தால் தான் சுவாரசியம் இன்னும் கூடும்.
ஆஸ்திரேலிய அணியின் முதல் இன்னிங்சில் டிராவிஸ் ஹெட் 141 பந்துகளில் 17 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் என ஒருநாள் போட்டி போல விளாசித் தள்ளினார். அணியின் முன்னிலையை மேல் தூக்கி திருத்தியதற்கு மிக முக்கியக் காரணமாக அமைந்தார். அவரை முஹம்மத் சிராஜ் க்ளீன் போல்ட் எடுத்து அவுட் ஆகியப் பின் இருவரும் சிறிய வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
சிறப்பாக ஆடிக் கொண்டிருந்த ஹெட் சிராஜ் வீசிய ஃபுல் டாஸ் பந்தை தவறவிட்டு ஸ்டம்புகள் சிதற விக்கெட்டை இழந்தார். இந்திய அணிக்கு தண்ணிக் காட்டியவரின் விக்கெட்டை எடுத்தால் சிராஜ் ஆக்ரோஷமாக கத்தி அதைக் கொண்டாடினார். இதனைப் பார்த்து கோபப்பட்ட ஹெட் உடனே அவரை தகாத வார்த்தையில் திட்ட பதிலுக்கு சிராஜும் நக்கலாக அவரை வெளியேச் செல்லுமாறு கையசைத்து இகழந்தார்.
போட்டி முடிந்த பிறகு தான் எந்த வித கெட்ட வார்த்தையில் பயன்படுத்தவில்லை என ஹெட் பேட்டியில் கூற, அதனைச் சிராஜ் பின்னர் மறுத்தார். எனினும் இருவருக்கும் ஐசிசி 20% போட்டி ஊதியத்தை அபராதமாக விதித்தது. இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் மற்றும் வர்ணையாளர் கிருஷ்ணமாரி ஶ்ரீகாந்த் இந்தச் சம்பவம் குறித்து தன் கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது, ” கொஞ்சம் கூட இரக்கம் இல்லாமால் அடித்து நொறுக்கினர் டிராவிஸ் ஹெட். சிராஜ்க்கு அறிவே இல்லையா ? அவனுக்கு என்ன பைத்தியமா புடிச்சிருச்சு ? சிராஜ் பந்துவீச்சில் நாலாப் பக்கமும் பவுண்டரி, சிக்ஸ் அடித்திருக்கிறார் டிராவிஸ் ஹெட். அவனை 140 ரன்களில் அவுட் ஆக்கிவிட்டு அவரை வழியனுப்பி வைக்குமாறு செய்த கொண்டாட்டம் தேவையா ? இதற்க்கு பெயர் ஸ்லெட்ஜிங்கா ? “
மேலும், ” ஒரு வீரர் 140 ரன்கள் அடித்துவிட்டு வெளியேறினால் அவரைப் பாராட்டி அனுப்ப வேண்டும். அதை விட்டுவிட்டு எதோ 0,10 ரன்களில் ஹெட்டின் விக்கெட்டை பிளான் செய்து தூக்கியது போல சிராஜ் ஆக்ரோஷமாக கொண்டாடிக் கொண்டு இருந்தார். இந்திய பவுலர்களுக்கு இன்னுமே புரியவில்லை. அஷ்வினை ஹெட் ஒரு ஸ்பின்னராகவே மதிக்கவில்லை, இறங்கி இறங்கி சிக்ஸ் அடித்தார். ” என ஶ்ரீகாந்த் மிகவும் கோபமாகப் பேசினார்.

