இங்கிலாந்து அணிக்கு எதிரான 4வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாட உள்ளது. 3 டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி 2 போட்டிகளிலும், இந்திய அணி ஒரு போட்டியிலும் வென்றிருக்கிறது. இதனிடையே லார்ட்ஸ் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில்லின் செயல்பாடுகள் மீது விமர்சனங்கள் எழுந்தன. ஜாக் கிராலியை பார்த்து கெட்ட வார்த்தையில் பேசியது பலரையும் ஆச்சரியப்படுத்தியது.
மனோஜ் திவாரி பேட்டி
இதனால் சுப்மன் கில் ரோகித் சர்மா பாணியில் அல்லாமல், விராட் கோலி ஸ்டைலை பின்பற்றுவதாக விமர்சிக்கப்பட்டது. இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரரான மனோஜ் திவாரி பேசும் போது, கேப்டனாக சுப்மன் கில்லின் செயல்பாடுகள் எனக்கு அதிருப்தியை கொடுக்கிறது. விராட் கோலியை அப்படியே பின்பற்ற விரும்புகிறார் சுப்மன் கில். அதன் முடிவாக சுப்மன் கில் பேட்டிங் மோசமாக மாறிவிட்டது.
ஐபிஎல் தொடரில் சுப்மன் கில் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டதில் இருந்தே கவனித்து வருகிறேன். அவர் களத்தில் ஆக்ரோஷமான மனநிலையுடன் இருக்கிறார். நடுவர்களுடன் ஆவேசமாக பேசுகிறார். பழைய சுப்மன் கில்லை போலவே இல்லை. அவர் கேப்டன் என்பதால் களத்தில் ஆக்ரோஷமாக இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. யாரிடமும் நிரூபிக்க வேண்டிய தேவையும் இல்லை.
சுப்மன் கில் மொழி
பேட்டிங்கில் ஆக்ரோஷமாக இருப்பதில் தவறு கிடையாது. அதற்காக பதிலடி கொடுக்க கூடாது என்று சொல்லவில்லை. ஆக்ரோஷத்தை வெற்றி பெறுவதில் காட்ட வேண்டும். இந்திய அணியால் எளிதாக 2-1 என்ற நிலையில் இருந்திருக்க முடியும். அதனை தவறவிட்டுள்ளது. இந்திய அணிக்கு அப்படியான ஆக்ரோஷம் மட்டுமே முக்கியம்.
சுப்மன் கில்லின் மொழியும், வார்த்தைகளும் எனக்கு பிடிக்கவில்லை. அதனை கேட்கவும், பார்க்கவும் மகிழ்ச்சியாக இல்லை. சர்வதேச கிரிக்கெட்டில் இதுவொரு ட்ரெண்டாக மாறிவிட்டது. இந்திய அணியின் பழைய கேப்டன்கள் இப்படி இருந்தார்கள். நமது மொழி, அடுத்த தலைமுறைக்கும் சென்று சேரும் என்று தெரிவித்துள்ளார்.

