இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் துணைக் கேப்டனாக சுப்மன் கில் நியமனம் செய்யப்பட்டார். அந்த பொறுப்பு கொடுத்த பின் சுப்மன் கில், 3 போட்டிகளில் ஒரு சதம், இரு அரைசதங்களை விளாசினார். அங்கிருந்த ஃபார்மை அப்படியே சாம்பியன்ஸ் டிராபி தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான ஆட்டத்திலும் செயல்படுத்தினார்.
சிறப்பாக ஆடி சதம் விளாசிய அவர், இந்திய அணியை வெற்றிபெற வைத்தார். இதனால் சுப்மன் கில்லின் ஃபார்ம் இந்திய அணிக்கு மிகப்பெரிய வெற்றியை சாம்பியன்ஸ் டிராபி தொடரில் தேடி கொடுக்கும் என்று நம்பப்படுகிறது. இந்த சூழலில் நாளை துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் நேருக்கு நேர் மோதுகின்றன.
சுப்மன் கில் பொறுப்பு
இதனால் பாகிஸ்தான் அணியை இந்திய அணி வீழ்த்தும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். இந்த நிலையில் இந்திய அணியின் துணைக் கேப்டன் சுப்மன் கில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது சுப்மன் கில் பேசும் போது, எப்போதெல்லாம் களத்தில் இருக்கிறேனோ, அப்போது பவுலர்களுடன் பேசி ஆலோசிக்க வேண்டும் என்பதே எனக்கு அளிக்கப்பட்டுள்ள பணி.
ஆட்டத்தில் பரபரப்பு அதிகமாக இருக்கும் போது பவுலர்கள் எண்ட்த திட்டத்தில் பவுலிங் செய்ய வேண்டும் என்பது தெரியாமல் குழம்புவார்கள். அதனால் மிட் ஆன் மற்றும் மிட் ஆஃப் திசையில் ஃபீல்டிங் நிற்கும் போது பவுலர்களிடம் ஆலோசிக்க வேண்டும் என்று கேப்டன் ரோஹித் சர்மா பணித்துள்ளார். இதனால் திட்டத்தின்படி பவுலர்கள் செயல்பட முடியும்.
பாகிஸ்தான் அணி எப்படி?
ஓய்வறையில் செய்யப்படும் திட்டங்களை சரியாக செயல்படுத்தவும் முடியும் என்று நினைக்கிறேன். பேட்டிங்கின் போது நான் எந்த பொறுப்பையும் உணர்வதில்லை. பேட்டிங்கின் போது ஒரு பேட்ஸ்மேனாக சிந்தித்து, அணிக்கு எது சரியோ அதனை செய்ய வேண்டும். அப்படிதான் விளையாடி வருகிறேன். இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் எப்போதும் பெரிய ஆட்டமாக இருக்கும்.
ஆனால் இறுதிப்போட்டி மட்டுமே பெரிய ஆட்டம் என்பது என் கருத்து. நாங்கள் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறோம். அதற்காக பாகிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிடப் போவதில்லை. எந்த சூழலிலும் எச்சரிக்கையாக இருந்து சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் என்பதே எங்களின் இலக்கு என்று தெரிவித்துள்ளார்.

