ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்ஸ் வித்தியாசத்தில் பிரம்மாண்ட வெற்றியை பெற்று இருக்கிறது. இந்திய அணியின் முன்னாள் கேப்டன்களான ரோகித் சர்மா 121 ரன்களையும், விராட் கோலி 74 ரன்களையும் எடுத்து கடைசி வரை களத்தில் நின்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றனர்.
கேப்டன்சி சொதப்பல்
இருந்தாலும், 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் ஆஸ்திரேலியா அணி 2-1 என்ற கணக்கில் வெற்றி பெற்றுள்ளது. இந்திய ஒருநாள் அணியின் புதிய கேப்டனாக பொறுப்பேற்று சுப்மன் கில் ஆடிய முதல் தொடரிலேயே தோல்வியை அடைந்துள்ளார். கேப்டனாகவும், பேட்ஸ்மேனாகவும் சுப்மன் கில் மிகப்பெரிய சொதப்பல்களை செய்து இந்திய ரசிகர்களை வியக்க வைத்துள்ளார்.
குல்தீப் யாதவை பிளேயிங் லெவனில் எடுக்க வேண்டும் என்று எத்தனையோ பேர் கூக்குரல் போட்டாலும், அது சுப்மன் கில்லின் காதுகளுக்கு மட்டும் எட்டவில்லை. பிரசித் கிருஷ்ணாவே இன்னும் முழுமையாக இந்திய அணியில் நிரந்தர இடத்தை பிடிக்காத போது, ஹர்சித் ராணாவை உருவாக்க நினைப்பது ஏன் என்பது புரியாத புரிராகவே இருக்கிறது.
பேட்டிங்கில் சொதப்பிய கில்
அக்சர் படேல் மற்றும் வாஷிங்டன் சுந்தர் என்று இரு ஆல்ரவுண்டர்களும் சிறப்பாகவே ஆடி இருந்தாலும், என்ன காரணத்திற்காக ஒரே மாதிரியான ஆல்ரவுண்டர்களை பிளேயிங் லெவனில் ஏன் எடுக்கிறார் என்பதும் கில்லுக்கு மட்டுமே தெரிந்த ரகசியம். அதேபோல் பிரசித் கிருஷ்ணா இருக்கும் போது ஏன் ஹர்சித் ராணாவை கொண்டு பவர் பிளேவில் அட்டாக் செய்தார் என்றும் தெரியவில்லை.
கேப்டன்சி ஒரு பக்கம் இருக்க, சுப்மன் கில் இம்முறை பேட்டிங்கிலும் உச்சக்கட்ட சொதப்பலை செய்துள்ளார். அதாவது 3 ஒருநாள் போட்டிகளிலும் சுப்மன் கில் சொல்லிக் கொள்ளும்படி ஒரு இன்னிங்ஸை கூட விளையாடவில்லை. 10, 9 மற்றும் 24 என்று 3 போட்டிகளிலும் சேர்த்து 43 ரன்களை மட்டுமே சுப்மன் கில் சேர்த்துள்ளார். இதனால் சுப்மன் கில் பேட்டிங்கில் கவனம் செலுத்த வேண்டும் என்று விமர்சனங்கள் அதிகரித்துள்ளது.

