இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான கடைசி ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே முதல் 2 ஒருநாள் போட்டியையும் வென்று இந்திய அணி தொடரை வென்றாலும், சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராக வேண்டிய தேவை இருப்பதால், இந்த ஆட்டத்திலும் சிறப்பாக செயல்பட வேண்டிய கட்டாயம் இந்திய அணிக்கு இருந்தது.
சுப்மன் கில் மீது விமர்சனம்
இந்த தொடருக்கு முன்பாக இந்திய அணியின் துணைக் கேப்டனாக சுப்மன் கில் அறிவிக்கப்பட்டார். அப்போது அஸ்வினின் நண்பரான பிரசன்னா உட்பட பலரும் சுப்மன் கில் இந்திய பிளேயிங் லெவனில் தேவையில்லை என்று கடுமையாக விமர்சித்தனர். ஜெய்ஸ்வாலை இந்திய டாப் ஆர்டரில் கொண்டு வர வேண்டும் என்று கூறி வந்தனர்.
ஆனால் சுப்மன் கில் தனது ஆட்டத்தின் மூலமாக ஒட்டுமொத்த விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளார். முதல் ஒருநாள் போட்டியில் 87 ரன்களை விளாசிய சுப்மன் கில், 2வது ஒருநாள் போட்டியில் 60 ரன்களுக்கும் ஆட்டமிழந்தார். இந்த இரு போட்டிகளிலும் சுப்மன் கில்லுக்கு சதமடிக்கும் வாய்ப்பு கிடைத்த போதும், அவரால் சதத்தை பூர்த்தி செய்ய முடியவில்லை.
ராசியான மைதானம்
இந்த நிலையில் சுப்மன் கில்லுக்கு ராசியான அகமதாபாத் மைதானத்தில் 3வது ஒருநாள் போட்டி தொடங்கியது. தொடக்கம் முதலே நிதானமாக ஆடிய சுப்மன் கில், தேவைக்கேற்ப அதிரடி பவுண்டரி மற்றும் சிக்சரை பொளந்து கட்டினார். சிறப்பாக ஆடிய அவர், 97 பந்துகளில் தனது 7வது ஒருநாள் சதத்தை விளாசி தள்ளினார். இதன் மூலமாக 50வது போட்டியில் சதம் விளாசிய முதல் வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.
சிறப்பாக ஆடிய சுப்மன் கில் 102 பந்துகளில் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதுமட்டுமல்லாமல் ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேகமாக 2,500 ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை சுப்மன் கில் படைத்துள்ளார். அதேபோல் 2022ஆம் ஆண்டுக்கு பின் சர்வதேச கிரிக்கெட்டில் அதிக சதங்களை விளாசிய வீரர்கள் பட்டியலில் சுப்மன் கில் 2வது இடத்தில் இருக்கிறார்.
இவருக்கு முன்பாக இங்கிலாந்து ஜாம்பவான் ஜோ ரூட் 92 இன்னிங்ஸில் 13 சதங்கள் உட்பட 3,942 ரன்களை விளாசி இருக்கிறார். சுப்மன் கில் 108 இன்னிங்ஸில் 13 சதங்கள் உட்பட 4,451 ரன்களை விளாசி இருக்கிறார். இதனால் இந்திய அணியின் துணைக் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டதில் எந்த தவறும் இல்லை என்று நிரூபித்துள்ளார்.

