ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் ஓபனிங் மற்றும் நம்பர் 3 இடத்திற்கு இவர்கள் இருவர்கள் தான் களமிறங்குவார்கள் என போட்டிக்கு முன்பு பத்திரிகையாளர்கள் சந்திப்பின்போது வெளிப்படையாக கூறியுள்ளார் கேப்டன் ஷுப்மன் கில்.
டி20 உலகக்கோப்பை தொடர் அண்மையில் வெஸ்ட் இண்டீஸ் தீவுகள் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடந்து முடிந்திருக்கிறது. இதில் 17 வருடங்களுக்குப் பிறகு இந்திய அணி டி20 சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. அத்துடன் கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆகியோர் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு முடிவையும் அறிவித்திருந்தனர்.
சரியாக உலகக்கோப்பை இறுதி போட்டி நடந்து முடிந்து ஒரு வாரம் ஆகியுள்ள நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரின் முதல் போட்டி இன்று ஹராரே மைதானத்தில் துவங்குகிறது. இதற்காக சில தினங்களுக்கு முன்பே இளம் பட்டாளம் கொண்ட இந்திய அணி ஜிம்பாப்வே-க்கு அனுப்பி வைக்கப்பட்டது.
அபிஷேக் ஷர்மா, சாய் சுதர்சன், ரியான் பராக் துஷார் தேஸ்பாண்டே, ஹர்ஷித் ராணா போன்றோருக்கு சர்வதேச டி20 தொடரில் முதன் முறையாக வாய்ப்புகள் கொடுக்கப்பட்டிருக்கிறது.
ஜிம்பாப்வே சென்றிருக்கும் இந்திய அணியில் நான்கு துவக்க வீரர்கள் இருக்கின்றனர். இதில் ஷுப்மன் கில்லுடன் இணைந்து யார் ஓப்பனிங் இறங்குவார் என்ற கேள்விகள் தொடர்ந்து எழுந்து வந்தது. அதேபோல் பிரத்தியேகமாக நம்பர் 3 இடத்தில் விளையாடுவதற்கு யாரும் இல்லை என தென்பட்டது. அதற்கான சந்தேகமும் ரசிகர்கள் மத்தியில் நிலவி வந்தது.
போட்டி துவங்குவதற்கு முன்பு பத்திரிகையாளர்கள் சந்திப்பில் ஈடுபட்டிருந்த கேப்டன் ஷுப்மன் கில் பல்வேறு சந்தேகங்களுக்கு பதில் அளித்தார். அத்துடன் உலககோப்பை வென்றது குறித்தும் தனது கருத்துக்களை பகிர்ந்து கொண்டார்
“ஐபிஎல் போன்ற மிகப்பெரிய தொடரில் முதல்முறையாக கேப்டன் பொறுப்பை வகித்தபோது பல்வேறு விஷயங்களை கற்றுக் கொண்டேன். குறிப்பாக என்னுடைய அணுகுமுறையை மற்றும் நான் பார்க்கும் கோணங்களை நிறைய புரிந்து கொண்டேன். பல்வேறு சவால்கள் நிறைந்ததாகவும் மன அழுத்தங்கள் நிறைந்ததாகவும் கேப்டன் பொறுப்பு இருந்தது. அவற்றையெல்லாம் உணர்ந்து முடிவுகளை எடுக்கவும் உணர்ந்து கொண்டேன்.
ஜிம்பாப்வே தொடருக்கு வந்திருக்கும் அணி உலகக்கோப்பையில் இருந்து முற்றிலும் மாறுபட்ட அணியாக, குறிப்பாக முதல் முறை விளையாடும் வீரர்கள் நிறைய பேர் இருக்கின்றனர். எங்களுடைய முதல் இலக்கு இந்த தொடரை கைப்பற்றுவது. முதன்முறையாக சர்வதேச போட்டிகளுக்கு வந்திருக்கும் வீரர்களுக்கு போதுமான அனுபவம் கிடைக்கப்பெறச் செய்ய வேண்டும் என்பதும் எனது இலக்காக இருக்கிறது.
துவக்க வீரராக அபிஷேக் ஷர்மா என்னுடன் இணைந்து களமிறங்குவார். மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்வதற்கு ருத்துராஜ் கெய்க்வாட்-இன் பேட்டிங் அணுகுமுறை சரியாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.
ரோகித் சர்மா, விராட் கோலி இணைந்து சர்வதேச போட்டிகளில் சாதித்ததை என்னால் செய்ய இயலுமா என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் அவர்கள் இட்டுச் சென்ற பாதையில் பயணித்து இந்திய அணிக்கு எத்தகைய பங்களிப்பு கொடுக்க வேண்டும் என்பதை உணர்ந்து செயல்படுவேன்.” எனப் பேசினார்.

