இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் இரட்டை சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். 2 நாட்களில் 5 செஷன்களில் களத்தில் இருந்த சுப்மன் கில், மொத்தமாக 387 பந்துகளை எதிர்கொண்டு 30 பவுண்டரி, 3 சிக்ஸ் உட்பட 269 ரன்களை விளாசி இருக்கிறார். இதன் மூலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது முதல் இரட்டை சதத்தை சுப்மன் கில் விளாசி தள்ளியுள்ளார்.
முதல் வீரர்
இதன் மூலமாக ஒருநாள் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டில் இரட்டை சதம் விளாசிய முதல் சர்வதேச வீரர் என்ற சாதனையை படைத்திருக்கிறார். அதேபோல் இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில், ஒரு கேப்டனாக அதிகபட்ச ஸ்கோரை விளாசி சாதனை படைத்துள்ளார். இதற்கு முன்பாக விராட் கோலி வங்கதேச அணிக்கு எதிராக 254 ரன்களை விளாசியதே சாதனையாக இருந்தது.
அதனை முறியடித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வரலாற்றில் ஆசியாவுக்குள் எப்போதும் இந்திய வீரர்கள் ராஜாவாக இருந்திருக்கின்றனர். ஆனால் ஆசியாவுக்கு வெளியில் சச்சின் டெண்டுல்கர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அடித்த 241 ரன்கள் தான் அதிகபட்ச ஸ்கோராகும். தற்போது 269 ரன்களை விளாசியதன் மூலமாக சுப்மன் கில் அந்த சாதனையையும் முறியடித்துள்ளார்.
சாதனை பட்டியல்
1979ல் இங்கிலாந்து மண்ணில் சுனில் கவாஸ்கர் அடித்த 221 ரன்களே இதுவரை அதிகபட்ச இந்திய வீரரின் ஸ்கோராக இருந்தது. அதனை சுப்மன் கில் முறியடித்திருக்கிறார். அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக சுப்மன் கில்லின் டெஸ்ட் சராசரி வெறும் 35ஆக மட்டுமே இருந்தது. தற்போது, நம்பர் 4ல் களமிறங்கி 3 இன்னிங்ஸில் 2 சதங்களை விளாசி தனது பேட்டிங் சராசரியை 40 ரன்களாக உயர்த்தி இருக்கிறார்.
இத்தனை சாதனைகளையும் சுப்மன் கில் வெறும் 25 வயதிலேயே செய்திருப்பது ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. அவர் ஆட்டமிழந்து வெளியேறிய போது ஒட்டுமொத்த எட்ஜ்ஸ்பாஸ்டன் மைதானமும் எழுந்து நின்று கைகளை தட்டி பாராட்டியது. இதனால் இந்திய அணி 587 ரன்கள் என்ற இமாலய ஸ்கோரை பதிவு செய்ய முடிந்தது.