ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் செப்.9 முதல் செப்.28 வரை ஐக்கிய அரபு அமீரகத்தில் நடக்கவுள்ளது. இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின் கிட்டத்தட்ட ஒரு மாதம் ஓய்வில் இருக்கும் இந்திய அணி, அடுத்ததாக ஆசியக் கோப்பை டி20 தொடரில் தான் விளையாட இருக்கிறது. இதற்கான இந்திய அணியை அஜித் அகர்க்கர் தலைமையிலான தேர்வு குழு தேர்வு செய்தது.
சூர்யகுமார் யாதவ் தலைமையிலான 15 பேர் கொண்ட இந்திய அணியில் சுப்மன் கில் துணைக் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டு தேர்வாகி இருக்கிறார். அதேபோல் அபிஷேக் சர்மா, ஜஸ்பிரிட் பும்ரா, அர்ஷ்தீப் சிங், வருண் சக்கரவர்த்தி, அக்சர் படேல், குல்தீப் யாதவ், சஞ்சு சாம்சன், ஜித்தேஷ் சர்மா, ரிங்கு சிங், சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ஹர்சித் ராணா மற்றும் திலக் வர்மா ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
ஸ்ரேயாஸ் ஐயர் நிராகரிப்பு
அதேபோல் மாற்று வீரர்களான வாஷிங்டன் சுந்தர், ரியான் பராக், பிரசித் கிருஷ்ணா, துருவ் ஜுரெல் மற்றும் ஜெய்ஸ்வால் ஆகிய 5 பேரும் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆனால் இந்த 2 பட்டியலிலும் ஸ்ரேயாஸ் ஐயரின் பெயர் இடம்பெறவில்லை. இது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஏனென்றால் ஐபிஎல் தொடரில் சுமார் 600 ரன்களுக்கும் மேல் 175 ஸ்ட்ரைக் ரேட்டில் குவித்தவர்.
ஸ்ரேயாஸ் ஐயர் நிராகரிக்கப்பட்டது தொடர்பாக இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் பேசும் போது, அஜித் அகர்கரிடம் எப்படி ஸ்ரேயாஸ் ஐயர் மாற்று வீரர்கள் பட்டியலில் மிஸ்ஸானார் என்பதை கேட்க விரும்புகிறேன். ஏனென்றால் ஸ்ரேயாஸ் ஐயரை விடவும் யார் வலிமையான வீரர்? சில நேரங்களில் தேர்வுக் குழு ஆலோசனையே கொஞ்சம் சுவாரஸ்யமானதாக இருக்கும். அதன் முடிவுகளே நமக்கு புரியாது.
அபிஷேக் நாயர் கருத்து
ஸ்ரேயாஸ் ஐயருக்கு இது மறைமுகமான ஒரு செய்தி சொல்லப்பட்டதாக தோன்றுகிறது. நீங்கள் எவ்வளவு கடினமாக முயற்சி செய்தாலும், நீங்கள் இந்திய அணிக்குள் வர முடியாது என்று சொல்வதை போல் உள்ளது. அவரின் இடத்தில் ரியான் பராக் அல்லது வேறு யாரோ தேர்வு செய்யப்பட்டிருக்கலாம். ஆனால் ஸ்ரேயாஸ் ஐயரை டி20 கிரிக்கெட் கண்களை கொண்டு பார்த்தார்களா என்பது முக்கியம்.
ஒரு வீரரின் தேர்வு என்பது சில நேரங்களில் நமக்கு பிடித்தவர்கள், பிடிக்காதவர்களை கொண்டும் நடக்கிறது. தேர்வுக் குழுவினருக்கு ஸ்ரேயாஸ் ஐயரை விடவும் வேறு யாரையும் பிடித்திருக்கலாம் என்று தெரிவித்துள்ளார். கேகேஆர் அணியில் இருந்த போதும், இந்திய அணிக்காக ஆடிய போதும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு உறுதுணையாக இருந்தவர் அபிஷேக் நாயர்.

