2024 ஆம் வருடத்திற்கான ஒலிம்பிக் போட்டிகள் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் வைத்து நடைபெற்று வருகிறது. 206 நாடுகளைச் சேர்ந்த 10,714 வீரர்கள் இந்த ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகின்றனர். 32 பிரிவுகளில் 326 விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகிறது. ஜூலை 26 ஆம் தேதி தொடங்கிய பாரிஸ் ஒலிம்பிக் போட்டிகள் ஆகஸ்ட் 11 ஆம் தேதியான நாளையுடன் முடிவடைய இருக்கிறது.
2024 ஆம் வருட ஒலிம்பிக் போட்டிகளில் 33 தங்கப்பதக்கங்கள் உட்பட 111 பதக்கங்களுடன் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. அமெரிக்காவைத் தொடர்ந்து 83 பதக்கங்களுடன் சீனா இரண்டாவது இடத்திலும் 48 பதக்கங்களுடன் ஆஸ்திரேலியா மூன்றாவது இடத்திலும் உள்ளது. 1 வெள்ளிப் பதக்கம் மற்றும் 5 வெண்கல பதக்கங்களை பெற்றுள்ள இந்தியா பதக்க பட்டியலில் 69ஆவது இடத்தில் இருக்கிறது. பாகிஸ்தான் 1 தங்கப்பதக்கம் வென்று 58 வது இடத்தில் உள்ளது.
2024 ஆம் வருட பாரீஸ் ஒலிம்பிக் போட்டியில் இந்திய தடகள வீரர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனர். ஹாக்கியில் சிறப்பாக விளையாடிய இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. மேலும் மல்யுத்த போட்டியில் 50 கிலோ எடை பிரிவில் இந்திய அணிக்கு தங்கப்பதக்கம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்திய மல்யுத்த வீராங்கனை வினிஷ் போகட் எடை அதிகரிப்பு காரணமாக தகுதி நீக்கம் செய்யப்பட்டதால் மல்யுத்தத்தில் தங்கம் வெல்லும் வாய்ப்பை இந்தியா இழந்தது.
இதனைத் தொடர்ந்து ஈட்டி எறிதல் போட்டியில் இந்தியாவிற்கு தங்கம் கிடைக்கும் என விளையாட்டு ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். அதேபோல இந்தியாவின் தங்க மகன் நீரஜ் சோப்ராவும் கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் 89.45 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து முன்னிலை வகித்து வந்தார். ஆனால் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அர்ஷத் நதிம் என்ற வீரர் 92.97 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து ஒலிம்பிக் போட்டிகளில் புதிய சாதனை படைத்ததோடு தங்கப் பதக்கத்தையும் வென்றார்.
இதனால் இந்தியாவிற்கு ஒலிம்பிக் போட்டியில் வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. இந்தியாவிற்கு தங்கப்பதக்கம் கிடைக்கும் வாய்ப்பு இழந்திருந்தாலும் நீரஜ் சோப்ரா மற்றும் அர்ஷத் நதீம் ஆகியோரின் தாய் அளித்திருக்கும் பேட்டி அனைவரின் மனதையும் வென்றுள்ளது. இது தொடர்பாக பேசியிருக்கும் நீரஜ் சோப்ராவின் தாயார் சரோஜ் தேவி ” எனது மகனுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்திருப்பதும் மகிழ்ச்சி தான். தங்கம் வென்ற அர்ஷத் நதீம் எங்கள் மகன் தான் என தெரிவித்திருந்தார். இவரது இந்த பேட்டி இந்தியா மற்றும் பாகிஸ்தானில் உள்ள மக்களிடம் மிகப்பெரிய அன்பையும் வரவேற்பையும் பெற்றது.
இதேபோன்று தங்கப்பதக்கம் வென்ற பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த அர்ஷத் நதீம் தாயார் அளித்திருந்த பேட்டியும் மக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. ஒலிம்பிக் போட்டியில் தனது மகன் தங்கப்பதக்கம் வென்றது குறித்து பேசிய அர்ஷதின் தாயார் ” நீரஜ் சோப்ராவும் தனது மகன்தான் என குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர்கள் இருவரும் நண்பர்கள் மற்றும் சகோதரர்கள் என குறிப்பிட்ட அவர் வெற்றி தோல்வி என்பது விளையாட்டில் நடக்கக்கூடிய ஒன்று, நான் நீரஜ் சோப்ராவிற்கும் பிரார்த்தனை செய்தேன். அவரை கடவுள் ஆசிர்வதிப்பார். வரும் காலங்களில் நீரஜ் சோப்ராவும் பல பதக்கங்களை வெல்வார் என கூறியிருக்கிறார்.
நீரஜ் சோப்ரா மற்றும் அர்ஷத் நதீம் ஆகியோரின் தாயார் அளித்திருக்கும் பேட்டிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. இது தொடர்பாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வேக பந்துவீச்சாளர் மற்றும் கிரிக்கெட் ரசிகர்களால் ராவல்பிண்டி எக்ஸ்பிரஸ் என்றழைக்கப்படும் சோயப் அக்தர் சமூக வலைதள பக்கத்தில் தனது நெகிழ்ச்சியான கருத்தை பதிவு செய்து இருக்கிறார். இது தொடர்பாக பதிவு செய்திருக்கும் அக்தர் ” தங்கப் பதக்கத்தை வென்ற அர்ஷத்தும் என் மகன்தான் என்ற நீரஜ் சோப்ராவின் தாயார் அளித்த பேட்டியை மேற்கோள் காட்டி இருக்கிறார். ஒரு தாயால் மட்டுமே இப்படிப்பட்ட வார்த்தைகளை கூற முடியும் என நெகிழ்ச்சியுடன் பதிவு செய்து இருக்கிறார் சோயப் அக்தர்.

