இந்த ஆண்டு வருகிற பிப்ரவரி 7ஆம் தேதி இந்தியா மற்றும் இலங்கையில் ஐசிசி டி20 உலகக்கோப்பை தொடர் துவங்க இருக்கிறது. இந்த தொடரில் அதிரடியாக இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் அணி விளையாடாது என பாகிஸ்தான் அரசாங்கம் அறிவித்திருக்கிறது. இந்த அறிவிப்பு கிரிக்கெட் உலகில் பெரிய அதிர்வலைகளையும் விமர்சனங்களையும் உருவாக்கிக் கொண்டு வருகிறது.
இந்த நிலையில் பாகிஸ்தான் அணியின் முன்னாள் கேப்டன் ஷாகித் அப்ரிடி இது குறித்து மிகவும் முக்கியமான ஒரு கருத்தை வெளியிட்டு இருக்கிறார். அவருடைய கருத்து பாகிஸ்தான் அரசாங்கம் எடுத்த முடிவுக்கு எதிராக இருப்பதால் பரபரப்பாக மாறி வருகிறது.
இதுகுறித்து ஷாகித் அப்ரிடி பேசும் பொழுது ” உண்மையில் டி20 உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணி இந்திய அணிக்கு எதிராக விளையாட மறுப்பது எனக்கு தனிப்பட்ட முறையில் பெரிய ஏமாற்றத்தை கொடுத்திருக்கிறது. அதே சமயத்தில் நான் என்னுடைய அரசாங்கத்தின் முடிவை மதித்து ஏற்றுக் கொள்கிறேன். ஆனாலும் கூட ஐசிசி அமைப்பு எல்லோருக்கும் ஒரே மாதிரியாக செயல்படும் நடுநிலை அமைப்பு என்பதை நிரூபிப்பதற்கான சரியான நேரம் இது” என்று கூறியிருக்கிறார்.
பாகிஸ்தான் தரப்பிலிருந்து முதல் எதிர்ப்பு உருவாகி இருப்பதால், பாகிஸ்தான் அரசாங்கம் தனது முடிவை மறுபரிசீலனை செய்வதற்கான வாய்ப்புகள் இருக்கிறது என்றும், மேலும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் பலரும் தொடர்ந்து எதிர்ப்புகளை தெரிவிக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

