தற்போது பாகிஸ்தான் அணியின் மர்ம சுழல் பந்துவீச்சாளர் உஸ்மான் தாரிக் பந்து வீசும் முறை பெரிய பேசுபொருளாக மாறியிருக்கிறது. அவர் சர்வதேச கிரிக்கெட் களத்திற்கு புதிதானவர் என்பதால், இந்திய வீரர்கள் இதுவரையில் அவரை எதிர்த்து விளையாடியது இல்லை. எனவே அவரை ஒரு முக்கிய ஆயுதமாக இந்திய அணிக்கு எதிராக பாகிஸ்தான் காலம் இறக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலங்கையின் அஜந்தா மெண்டிசை வைத்து ஆரம்பத்தில் இந்திய அணியை வென்றது போல் செய்ய பாகிஸ்தான் திட்டமிடுவதாக கூறப்படுகிறது.
தற்போது பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சக்லைன் முஸ்டாக் பரபரப்பான ஒரு குற்றச்சாட்டை இந்திய கிரிக்கெட் வாரியத்தின் மீது வைத்திருக்கிறார். இந்தியா உஸ்மான் தாரிக் பந்துவீச்சை பார்த்து பயந்து, ஐசிசி மூலமாக பாகிஸ்தான் விளையாடும் போட்டிக்கு ஆடுகளத்தை வேகப்பந்து வீச்சுக்கு சாதகமாக மாற்றிவிடும் என குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார்.
இதுகுறித்து அவர் பேசும் பொழுது “தற்போது கிரிக்கெட்டில் உள்ள நவீன வசதிகளையும், நவீன ஆடுகளப் பராமரிப்பாளர்களையும் வைத்து பார்த்தால், எந்த நேரத்தில் வேண்டுமானாலும் ஆடுகளத்தை மாற்றி விட முடியும். ஐசிசி தற்பொழுது யாருடைய கண்ட்ரோலில் இருக்கிறது என்று நமக்கு நன்றாகவே தெரியும். மேலும் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம் அமைக்கப்பட்டால் பாகிஸ்தானின் சுழல் பந்துவீச்சுத் திட்டங்கள் அனைத்துமே உடைந்து மாறிவிடும்” என்று கூறியிருக்கிறார்.

