நேற்று நடைபெற்ற இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் இந்திய அணி 96 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக கோப்பையை கைப்பற்றி சாதனை படைத்திருக்கிறது. இந்தப் போட்டியிலும் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி 46 பந்துகளில் 89 ரன்கள் குவித்து இந்திய அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்தப் போட்டியில் முடிந்த பிறகு அவர் கூறி இருப்பதாவது ” இந்த உணர்வு மிகவும் சிறப்பு வாய்ந்ததாக உள்ளது இது குறித்து பேசுவதற்கு என்னிடம் வார்த்தைகளே இல்லை. இந்த பயணம் கிட்டதட்ட இரண்டு ஆண்டுகளாக நடந்திருக்கிறது. 2024 ஆம் ஆண்டு நடைபெற்ற உலக கோப்பையில் ஒரு போட்டியில் கூட விளையாடாமல் இருந்தேன். அப்போது இதனை கற்பனை செய்து கொண்டு தொடர்ந்து கடுமையாக உழைத்துக் கொண்டிருந்தேன். கடைசியாக நடைபெற்ற நியூஸிலாந்து தொடருக்குப் பிறகு நான் மிகவும் மனம் உடைந்து விட்டேன்.
என் கனவுகள் எல்லாம் சிதறிப் போகிறது என்று நினைத்தேன். அப்போதுதான் எனக்கு கடவுள் வேறு திட்டங்கள் வைத்திருந்தார். இந்த சூழ்நிலையில் பல முன்னாள் வீரர்கள் என்னை தொடர்பு கொண்டு உதவி செய்ய வந்தார்கள். அப்போது நான் சச்சின் சாருடன் நிறைய பேசினேன். அவரைப் போன்ற ஒருவர் ஆலோசனை தந்து வழிகாட்டுவதை விட வேறு என்ன சிறப்பாக இருந்து விடப் போகிறது. என்னை ஆதரித்த அனைவருக்கும் நான் நன்றி சொல்லிக் கொள்கிறேன் இதைவிட ஒரு சிறப்பு வாய்ந்த தருணம் இருக்க முடியாது” என்று பேசி இருக்கிறார்.

