ஆசியக் கோப்பை கிரிக்கெட் தொடர் நாளை மறுநாள் துபாயில் தொடங்க உள்ளது. அதில் செப்.10ல் நடக்கும் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகம் அணிக்கு எதிராக இந்திய அணி விளையாட உள்ளது. இதன்பின் செப் 14ல் பாகிஸ்தான் அணியை எதிர்த்து இந்திய அணி விளையாடுகிறது. டி20 ஆட்டமாக நடப்பதால், ஆசியக் கோப்பை தொடர் மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.
ஆசியக் கோப்பை தொடர்
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பாக துபாய் சென்ற இந்திய அணி, நேற்று முதல் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இந்த பயிற்சியில் சில வித்தியாசமான காட்சிகள் நிகழ்ந்திருப்பது ரசிகர்களிடையே கவலை அடைய செய்துள்ளது. ஏனென்றால் 3 நெட்களில் 6 பேட்ஸ்மேன்கள் பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதன்படி சூர்யகுமார் யாதவ், சுப்மன் கில், அபிஷேக் சர்மா ஆகிய மூவரும் முதலில் பயிற்சி செய்துள்ளனர்.
அதன்பின் 2வது செட்டில் திலக் வர்மா, ரிங்கு சிங் மற்றும் ஜித்தேஷ் சர்மா ஆகிய மூவரும் பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். இவர்களுக்கு பும்ரா, சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, அர்ஷ்தீப் சிங் ஆகியோர் பவுலிங் செய்திருக்கின்றனர். ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சன் பேட்டிங் பயிற்சியில் ஈடுபடவில்லை.
சஞ்சு சாம்சன் பயிற்சி செய்யவில்லை
6 பேட்ஸ்மேன்களின் பயிற்சியையும் சஞ்சு சாம்சன் எதிரில் நின்று வேடிக்கை பார்த்திருக்கிறார். அவருக்கு ஃபீல்டிங் பயிற்சியும் அளிக்கப்படவில்லை. ஆசியக் கோப்பை தொடருக்கு இன்னும் ஒருநாள் மட்டுமே இருப்பதால், சஞ்சு சாம்சன் பயிற்சியில் ஈடுபடாதது ரசிகர்களிடையே விவாதப் பொருளாக மாறி இருக்கிறது. இதனால் சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இடம்பிடிப்பது கடினம் என்று பார்க்கப்படுகிறது.
இந்த பயிற்சிக்கு பின் சூர்யகுமார் யாதவ் மற்றும் சுப்மன் கில் இருவரும் கவுதம் கம்பீருடன் சில நிமிடங்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். சஞ்சு சாம்சனுக்கு முன்பாக ஜித்தேஷ் சர்மா பயிற்சி மேற்கொண்டு வருவது பல்வேறு கேள்விகளையும் எழுப்பி இருக்கிறது. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சஞ்சு சாம்சன் தொடக்க வீரராக களமிறங்கி சிறப்பாக ஆடி இருக்கிறார். இதனால் சுப்மன் கில் தொடக்கம் கொடுப்பார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

