இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகளில் வென்று ஏற்கனவே நியூசிலாந்து தொடரைக் கைப்பற்றியது. மும்பையில் தற்போது நடந்துக் கொண்டிருக்கும் மூன்றாவது டெஸ்ட்டில் எப்படியாவது வென்று வொயிட்வாஷை தடுக்கும் பணியில் இந்தியா உள்ளது.
இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் சர்பாரஸ் கான் 8வது இடத்தில் களமிறங்கினார். அவரை மிகவும் தாமதமாக பேட்டிங்க்கு அனுப்பியதைச் சுட்டிக் காட்டி விமர்சனம் செய்துள்ளார் முன்னாள் இந்திய வீரர் மற்றும் கிரிக்கெட் வர்னையாளர் சஞ்சய் மஞ்சரேக்கர்.
மூன்றாவது டெஸ்ட்டில் நியூசிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது. வில் யங் 71 மற்றும் டாரில் மிட்செல் 82 ரன்கள் சேர்த்து சிறப்பிக்க மொத்தம் 235 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தொடர்ந்து ஆடிய இந்திய அணி 78/1 என நல்ல நிலையில் இருந்த போது நாளின் முடிவில் அடுத்தடுத்து மூன்று விக்கெட்டுகளை இழந்து 84/4 என முடித்தது.
இதனைத் தொடர்ந்து கில் – பண்ட் கூட்டணி அதிரடியாக விளையாடி ரன்கள் சேர்ந்தது. இருவரும் அரை சதத்தைக் கடந்த போது பண்ட் 60 ரன்களில் ஆட்டமிழந்தார். அவர் வெளியேறிய பிறகு அடுத்ததாக சர்பராஸ் கானுக்குப் பதிலாக ஜடேஜா பேட்டிங்க்கு வந்தார். வலது கை – இடது கை காம்பினேஷனை தொடரவே பண்ட் ஆட்டமிழந்தப் பிறகு அவரின் இடத்தில் இடது கை பேட்ஸ்மேன் ஜடேஜா களமிறங்கினார்.
ஜடேஜா 14 ரன்னில் வெளியேறிய பிறகு சர்பராஸ் கான் உள்ளே வந்தார். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அவர் வெறும் 4 பந்துகளில் டக் அவுட் ஆகி பெரிய ஏமாற்றம் அளித்தார். ஆனால் இதற்கு காரணமாக இந்திய அணியின் மேலாண்மையைக் குற்றம் சாட்டியுள்ளார் சஞ்சய் மஞ்சரேக்கர். இது பற்றி அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அவர் கூறியதாவது, ” பார்மில் இருக்கும் ஒரு வீரர், 3 டெஸ்ட்டில் மூன்று 50+ ஸ்கோர்கள் அடித்திருக்கிறார், பெங்களூர் டெஸ்ட்டில் 150 ரன்கள் விளாசியுள்ளவர், ஸ்பின்னர்களை சிறப்பாக ஆடக் கூடிய ஒரு நல்ல வீரரை வலது கை – இடது கை காம்பினேஷன் காரணமாக நம்பர் 8ல் விளையாட கீழத் தள்வதா ? எனக்கு இந்த லாஜிக் சுத்தமாகப் புரியவில்லை. இந்திய மேலாண்மையின் இந்த முடிவு மிகவும் மோசம். ” என்றார்.
ரஞ்சிக் கோப்பையில் மும்பை அணிக்காக இதே வான்கடே மைதானத்தில் டன் கணக்கில் ரன்கள் சேர்ந்துள்ளார் சர்பராஸ் கான். அவரின் சொந்த மைதானத்தில் அவரை கீழே ஆடவிட்டிருப்பது மிகவும் மோசமான முடிவாக தெரிந்துள்ளது என்பதே சஞ்சய் மஞ்சரேக்கர் சுட்டிக் காட்டும் தவறு.

