தற்போது நடந்து வரும் பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் இந்திய சீனியர் வீரர்கள் ரோஹித் மற்றும் கோலி இருவரும் மோசமான பார்மில் உள்ளனர். இதில் விராட் கோலி தொடர்ந்து ஒரே மாதிரி விக்கெட்டை பறிகொடுத்து மிகவும் ஏமாற்றம் அளித்துள்ளார்.
நடப்பு டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் அபார சதம் விளாசியது மட்டுமே விராட் கோலியின் நல்ல ஆட்டம். அது தவிர மீதம் இன்னிங்ஸ் 5, 7, 11, 3, 5, 36 என சொற்ப ரன்களில் வெளியேறி ஃபார்ம் அவுட்டில் இருக்கிறார். மேலும் 2024ல் அவர் டெஸ்ட்டில் வெறும் 24 சராசரியை மட்டுமே பதிவு செய்துள்ளார்.
தொடர்ந்து ஒரே மாதிரி ஸ்டம்ப்புக்கு வெளியில் போகும் பந்தில் எட்ஜ் ஆகி கீப்பர் அல்ல ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து அவுட் ஆகிறார். இது இந்தத் தொடரில் மட்டுமல்ல கடந்த 4 வருடங்களாக இந்த சிக்கல் விராட் கோலியிடம் நீடிக்கிறது. இது குறித்து பல்வேறு விமர்சனங்கள் வந்தப் போதிலும் அவர் தொடர்ந்து இதே போலவே விக்கெட்டை விட்டு வெளியேறுகிறார்.
இது பற்றி அண்மையில் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் கூறியதாவது, ” நான் டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி போன்ற திறமையான வீரர் இத்தகு பலவீனம் இருப்பது போல் பார்த்ததில்லை. வேறு எந்த ஒரு டாப் கிரிக்கெட் வீரரையும் இப்படி பார்த்ததில்லை. “
” ஒரு கிரிக்கெட் வீரருக்கு கடினமான காலம் வந்து அவர் எளிய முறையில் ஒரே மாதிரியாக தொடர்ந்து விக்கெட்டை விடுவது வழக்கமாக நடப்பது தான். ஆனால் விராட் கோலியின் கதை எல்லை மீறிப் போய்க் கொண்டிருக்கிறது. விராட் கோலி இந்த ஷாட்டுக்கு ஆட்டமிழப்பது இது முதல் முறையும் அல்ல கடைசி முறையும் அல்ல. ஆஃப் சைடில் கவர் ட்ரைவ் அடிக்க வேண்டுமென்ற அவரது வேகத்தை அவரால் கட்டுப்படுத்த இயலவில்லை. ” என்றார் சஞ்சய் மஞ்ஞரேக்கர்.
விராட் கோலி தற்போது இருக்கும் சிக்கலில் 2004இல் சச்சினும் இருந்துள்ளார். மிகவும் நிதானமாக கட்டுப்பாடுடன் ஒரு கவர் ட்ரைவ் கூட இல்லாமால் சச்சின் சிட்னி மைதானத்தில் 241 ரன்கள் விளாசினார். அதே போல விராட் கோலியும் ஒரு அவதாரம் எடுத்தால் மட்டுமே இச்சிக்கல் தீரும், ரசிகர்களின் எதிர்பார்ப்பும் பூர்த்தியாகும்.

