முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்சரேக்கர் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் பேட்டிங் நுட்பத்தை குறை கூறியுள்ளார். அதற்கான காரணத்தையும் அதனை மேம்படுத்துமாறும் அறிவுரை வழங்கியுள்ளார்.
2024 பார்டர் கவாஸ்கர் தொடர் இதுவரை 1-1 என்ற கணக்கில் சமனில் உள்ளது. அண்மையில் மெல்போர்ன் மைதானத்தில் மிகவும் விறுவிறுப்பான நான்காவது டெஸ்ட் போட்டி நடந்துக் கொண்டிருக்கிறது. இப்போதைக்கு போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் கைகள் ஓங்கியுள்ளது.
முதலில் பேட்டிங் ஆடிய ஆஸ்திரேலியா ஸ்மித்தின் அபார 140 ரன்கள், கான்ஸ்டாஸ், கவாஜா, லபுஷேன் ஆகியோரின் அரை சதம் மற்றும் கம்மின்ஸின் 49 என மொத்தமாக 474 ரன்களைக் குவித்தது. பின்பு ஆடிய இந்திய அணி 358/9 என மூன்றாவது நாள் ஆட்டத்தை முடித்துள்ளது. ஜெய்சுவால் 82, சுந்தர் 50, நிதிஷ் ரெட்டி அதிரடி சதம் தவிர மற்ற யாரும் சுத்தமாக சோபிக்கவில்லை.
கடந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய அணியின் சரிவைத் தாண்டி ஜடேஜா சிறப்பாக ஆடி அரை சதம் விளாசி அணியை மீட்டார். ஆனால் இம்முறை அதே போல முக்கியக் கட்டத்தில் வெறும் 17 ரன்களுக்கு விக்கெட்டைக் கொடுத்து வெளியேறியுள்ளார். அவர் அவுட் ஆன விதம் குறித்து சஞ்சய் மஞ்சரேக்கர் பெரிய விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
அவர் கூறியதாவது, ” ஜடேஜா வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக ஆடிக் கொண்டிருக்கிறார், ஒரு சிறிய தவறுக் கூட இல்லை. ஆனால் நாதன் லயன் பந்துவீச வந்த உடனே அவர் ஆஃப் ஸ்பின் போடுவார் என ஜடேஜா எதிர்பார்த்து ஆட, பந்து நேராக வந்து அவரது பேடில் பட எல்.பி.டபள்யூ ஆகி ஆட்டமிழந்தார். “
” ஸ்பின்னர்களை சரியாக எதிர்கொள்ள ஜடேஜா இன்னும் கொஞ்சம் பயிற்சி எடுக்க வேண்டும். இதற்க்கு முன்னர் அவர் ஸ்பின்னர்களைச் சிறப்பாகக் கையாண்டார். ஆனால் வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான வெளிநாட்டுக் களங்களில் தொடர்ந்து வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொண்டு ஆடுவதால், ஸ்பின்னில் கவனத்தை கோட்டை விட்டுவிட்டார். ஒரு வேளை வெறும் வேகப்பந்து வீச்சாளர்கள் மட்டும் போட்டால், ஜடேஜா சிறப்பாக ஆடுவார். ” என அறிவுரை வழங்கினார் சஞ்சய் மஞ்சரேக்கர்.

