வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 2-0 என்ற கணக்கில் வென்றது. இந்த டெஸ்ட் போட்டியில் இளம் வீரர் சாய் சுதர்சனின் செயல்பாடுகளில் பாராட்டுக்களை பெற்று வருகிறது. 2வது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 87 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்த அவர், 2வது இன்னிங்ஸில் 39 ரன்களை எடுத்தார்.
ஸ்ரீகாந்த் கருத்து
இதனால் இந்திய அணியின் நம்பர் 3 பேட்ஸ்மேன் சாய் சுதர்சன் தான் என்று பலரும் பேசி வருகின்றனர். அதற்கேற்ப சாய் சுதர்சன் இதுவரை ஆடிய 5 போட்டிகளில் 2 அரைசதங்களை விளாசி இருக்கிறார். இன்னும் சில போட்டிகளில் சாய் சுதர்சன் சிறப்பாக விளையாடும் பட்சத்தில், அடுத்த 10 ஆண்டுகளுக்கு அவர் டெஸ்ட் அணியில் இடத்தை உறுதி செய்து கொள்ள முடியும்.
இதுதொடர்பாக இந்திய ஜாம்பவான் கிரிஸ் ஸ்ரீகாந்த் பேசும் போது, சாய் சுதர்சன் விஷயத்தில் நாம் இன்னும் சில காலம் அமைதி காக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அவர் சிறப்பாக விளையாடினார். பேக் ஃபூட்டில் ஆடிய போது மிகச்சிறப்பாக இருந்தது. ஆனால் அடுத்த 2 அல்லது 3 தொடர்களில் சாய் சுதர்சன் நிச்சயமாக பிளேயிங் லெவனில் இடம்பெறுவார் என்று சொல்ல முடியாது.
சதத்தை வீணடித்த சாய் சுதர்சன்
ஏனென்றால் எளிதாக அடித்திருக்க வேண்டிய ஒரு சதத்தை வீணடித்துவிட்டார். ஏனென்றால் 87 ரன்கள் என்ன.. 99 ரன்களுக்கும் 100 ரன்களுக்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசம் இருக்கிறது. ஒரு சதம் அடித்துவிட்டால் போதும்.. அது மிகப்பெரிய லெவலாக இருக்கும்.. 70 ரன்களுக்கும் 100 ரன்களுக்கும் இடையிலான வித்தியாசம் பெரிது.
எவ்வளவு மோசமாக ஆடினாலும், பலரும் எத்தனை சதங்கள் அடித்துள்ளார் என்பதுதான்.. அதனைதான் சாய் சுதர்சன் தவறவிட்டுள்ளார் என்று தெரிவித்துள்ளார். தமிழக வீரரான சாய் சுதர்சன் குறித்து ஸ்ரீகாந்த் பேசி இருப்பது ரசிகர்களிடையே பேசப்பட்டு வருகிறது. ஸ்ரீகாந்தின் கருத்தும் சரியானதே என்றும் கூறி வருகின்றனர்.

