இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று தொடங்கியது. 2 போட்டிகளைக் கொண்ட தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி 144 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. இந்நிலையில் ஜோடி சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா இந்திய அணியை சரிவிலிருந்து மீட்டதோடு முதல் நாள் ஆட்டநேர முடிவில் 339 ரன்கள் குவிக்க உதவினர். இவர்கள் இருவரது ஆட்டத்தையும் பல்வேறு முன்னாள் வீரர்களும் பாராட்டி வரும் நிலையில் இந்திய அணியின் மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் உணர்வுபூர்வமான பதிவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து இருக்கிறார்.
இலங்கை சுற்றுப்பயணத்தை முடித்த இந்திய அணி 45 நாட்கள் ஓய்வு இருக்கும் பிறகு பங்களாதேஷ் அணியுடன் டெஸ்ட் தொடரில் நேற்று முதல் விளையாடி வருகிறது. சென்னை சேப்பாக்கம், எம்ஏ சிதம்பரம் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற பங்களாதேஷ் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனைத் தொடர்ந்து இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது. கேப்டன் ரோஹித் சர்மா 6 ரன்களில் ஆட்டம் இழந்த நிலையில், கில் ரன் எதுவும் எடுக்காமல் அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து நட்சத்திர வீரர் விராட் கோலி 6 ரன் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். இதனைத் தொடர்ந்து ஓரளவு தாக்குப்பிடித்து விளையாடிய ரிஷப் பண்ட் 39 ரன்களில் ஆட்டம் இழக்க சிறப்பாக விளையாடிய ஜெய்ஷ்வால் 56 ரன்கள் எடுத்து அவுட் ஆனார்.
இதனைத் தொடர்ந்து கேஎல ராகுல் 16 ரன்களில் ஆட்டம் இழந்தார். இதனால் இந்திய அணி 144 ரன்கள் எடுத்த நிலையில் 6 விக்கெட்டுகள் இழந்து தடுமாறியது. அப்போது களத்தில் ரவீந்திர ஜடேஜா உடன் ஜோடி சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் அதிரடியாக ஆட்டத்தை தொடங்கினார். இதனால் இந்திய அணியின் ஸ்கோர் வேகமாக உயர்ந்தது. அஸ்வினை தொடர்ந்து ரவீந்திர ஜடேஜாவும் அதிரடி ஆட்டத்தை கையில் எடுத்தார். இருவரும் கவுன்டர் அட்டாக்கிங் செய்து விளையாடி இந்திய அணியின் ரன் வேட்டையை தொடங்கினர் சிறப்பாக விளையாடிய இவர்கள் இருவரும் அரை சதம் எடுத்தனர்.
தொடர்ந்து அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்திய அஸ்வின் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது ஆறாவது சதத்தை நிறைவு செய்தார். மேலும் அவரது சொந்த மைதானமான சேப்பாக்கத்தில் இரண்டாவது சதத்தை எட்டினார் அஸ்வின். அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் இணைந்து 7-வது விக்கெட்டுக்கு 195 ரன்கள் சேர்த்தனர். இதனால் இந்தியா முதல் நாள் ஆட்ட நேர முடிவில் 339 ரன்களுக்கு 6 விக்கெட்டுகள் இழந்து வலுவான நிலையை எட்டியது. மேலும் நேற்றைய போட்டியில் ஆறாவது டெஸ்ட் சத்தத்தை எட்டி இருப்பதன் மூலம் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் சாதனையை சமன் செய்திருக்கிறார் அஸ்வின்.
டெஸ்ட் போட்டிகளில் தோனி 6 சதங்கள் எடுத்திருந்தார். தற்போது அஸ்வின் தனது ஆறாவது சதத்தை எட்டி இருப்பதன் மூலம் தோனியின் சாதனையை சமன் செய்துள்ளார். இவர்கள் இருவரது சிறப்பான ஆட்டம் கிரிக்கெட் வல்லுனர்கள் மற்றும் முன்னாள் வீரர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது. பல்வேறு முன்னாள் வீரர்களும் அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் சிறப்பான ஆட்டத்தை பாராட்டி தங்களது சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவு செய்தனர். இந்நிலையில் இந்திய அணியின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் ரவிச்சந்திரன் அஸ்வினின் ஆட்டத்தை வெகுவாக புகழ்ந்து தனது எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவு செய்து இருக்கிறார்.
இது தொடர்பாக பதிவு செய்திருக்கும் அவர் அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் ஆட்டம் இந்திய அணியை இக்கட்டான சூழ்நிலையில் இருந்து மீட்டு ஆதிக்கம் செலுத்தும் இடத்திற்கு கொண்டு வந்திருக்கிறது. இவர்கள் இருவரது ஆட்டமும் போட்டியை இந்திய அணிக்கு சாதகமாக மாற்றி இருக்கிறது. அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் மிகச் சிறப்பாக விளையாடினர். இருவரும் சிறப்பான ஆல் ரவுண்டர் திறமையை வெளிப்படுத்தினர். அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரையும் மனதார வாழ்த்துகிறேன் என நெகிழ்ச்சியாக பதிவு செய்து இருக்கிறார் சச்சின் டெண்டுல்கர்.
மேலும் இந்திய அணியின் முன்னாள் வீரர் அனில் கும்ப்ளே ரவிச்சந்திரன் அஸ்வினின் சதம் மற்றும் ரவீந்திர ஜடேஜாவின் அரை சதம் ஆட்டத்தின் போக்கை இந்தியாவின் பக்கம் மாற்றி இருக்கிறது. அவர்களது இடைவிடாத முயற்சி மற்றும் நிதானம் பாராட்டத்தக்கது என பதிவு செய்துள்ளார். மேலும் அஸ்வின் மற்றும் ஜடேஜாவின் சிறப்பான ஆட்டத்தை பாராட்டிய இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் ரவீந்திர ஜடேஜா மற்றும் அஸ்வின் மிகச் சிறப்பாக விளையாடினார்கள். இந்திய அணி எப்போதும் தங்களது சொந்த மைதானங்களில் டேட்டிங்கில் மாயாஜாலங்களை நிகழ்த்தும். டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இது ஒரு சிறந்த ஆட்டம் என பாராட்டி இருக்கிறார்.

