இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகரமான கேப்டனாக திகழ்ந்த ரோகித் சர்மா சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் அது குறித்து மனம் திறந்து பேசிய ரோஹித் தன்னுடைய எதிர்கால கனவு குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
கடந்த 2007ஆம் ஆண்டு இந்திய கிரிக்கெட்டுக்கு அறிமுகமான ரோகித் சர்மா டி20 உலக கோப்பையில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் அதற்குப் பின்னர் தடுமாற்றமான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் 2011 ஆம் ஆண்டு அவருக்கு ஒரு நாள் உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இருப்பினும் அவரது திறமையை அறிந்து 2013 ஆம் ஆண்டு கேப்டன் தோனி தலைமையில் சாம்பியன்ஸ் ட்ராஃபி தொடரில் விளையாடும் வாய்ப்பு பெற்றார். அன்று முதல் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிலையில் ஒரு நாள் கிரிக்கெட்டில் மூன்று முறை இரட்டை சதம் அடித்து அபார சாதனை படைத்திருக்கிறார்.
அதற்குப் பின்னர் 2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஒரு நாள் உலகக் கோப்பையில் அவரது தலைமையில் இந்திய அணி எதிர்பாராத விதமாக இறுதிப்போட்டியில் தோல்வி அடைந்தது. ஆனால் அதற்குப் பிறகு கடந்த ஆண்டு டி20 உலக கோப்பையை வென்று வரலாறு படைத்த ரோகித் சர்மா, சமீபத்தில் நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கோப்பையை வென்று கொடுத்த நிலையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருக்கிறார்.
இந்த சூழ்நிலையில் டி20 கிரிக்கெட்டில் இருந்து ஏற்கனவே ஓய்வை அறிவித்திருக்கும் நிலையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வை அறிவித்து இருப்பதால் இனி விரைவாக ஒரு நாள் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவார் என்கிற அச்சம் ரசிகர்கள் இடையே காணப்பட்டது. இந்த சூழ்நிலையில் அது குறித்து விளக்கி பேசி இருக்கும் ரோஹித் சர்மா 2027 ஒரு நாள் உலகக் கோப்பையில் விளையாடுவது தான் எனது ஒரே இலக்கு என நிம்மதியான தகவலை ரசிகர்களுக்கு அறிவித்திருக்கிறார்.
இதையும் படிங்க:இந்திய கிரிக்கெட் கமெண்ட்ரி படுமோசமா இருக்கு.. ஒரு வீரரை தாக்கிப் பேசுவதையே வழக்கமா வச்சிருக்காங்க – ரோகித் சர்மா ஆதங்கம்
இதுகுறித்து ரோகித் சர்மா கூறும் போது “கண்டிப்பாக 2027 ஆம் ஆண்டு நடைபெற உள்ள ஒரு நாள் உலகப் கோப்பையில் விளையாட வேண்டும் என்கிற கனவு தான் என்னுடைய மனதில் இருக்கிறது. ஒரு நாள் உலகக் கோப்பையில் விளையாடி வென்று கோப்பையை என்னுடைய அலமாரியில் சேர்ப்பது தான் சிறப்பானதாக இருக்கும். அப்படி நடந்தால் அதுதான் என்னுடைய கேரியரில் மிகவும் மகத்தான விஷயமாக இருக்கும்” என பேசி இருக்கிறார்.

