2025 சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் இந்திய சீனியர் வீரர்கள் ரோஹித், விராட் இருவரும் ஓய்வை அறிவிக்கிறார்களா ? என்ற குழப்பம் நிலவி வருகிறது. குறிப்பாக ரோஹித் சர்மாவின் கேப்டன்சி மற்றும் அவரது ஓய்வு பற்றியே அதிகம் பேசப்பட்டு வருகிறது. இது குறித்து சவுரவ் கங்குலி தன் கருத்தைப் பதிவிட்டுள்ளார்.
ரோஹித் சர்மாவுக்கு தற்போது 37 வயதாகிறது. அவர் 2027 உலகக் கோப்பை செய்வதில் பெரிய சந்தேகம். அடுத்த உலகக் கோப்பை வருவதற்கு முன்னால் புதிய கேப்டனை அறிவித்து அவருக்கு 2 ஆண்டுகள் நேரம் கொடுத்தால் மட்டுமே, இந்திய கிரிக்கெட்டுக்கு நல்ல மாற்றமாக அமையும் என பிசிசிஐ நம்புகிறது. ஆனால் முழு முடிவை எடுக்க இறுதிப் போட்டி முடியும்வரை காத்திருக்க வேண்டியுள்ளது.
இது பற்றி சவுரவ் கங்குலி கூறியிருப்பதாவது, ” இந்திய அணியைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக ஐசிசி இறுதிப் போட்டிக்கு அழைத்து வந்துள்ளார் ரோஹித் சர்மா. கடந்த டி20ஐ உலகக் கோப்பையும் வென்றுள்ளார். அவரது ஓய்வை இப்போது பேசுவது தேவையற்றது என நான் நினைக்கிறேன். ஆனால் தேர்வாளர்கள் என்ன நினைக்கிறார்கள் எனக்குத் தெரியாது. “
” இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபியை வென்றால், அது ரோஹித் சர்மாவுக்கு ஓய்வை அறிவிக் நல்ல ஒரு தருணமாக இருக்கும். டி20ஐ உலகக் கோப்பையை வென்று டி20ஐ வடிவத்தில் இருந்து ஓய்வு பெற்றது போல அமையும். பைனலுக்கு முன்னர் நடத்தப்பட்ட செய்தியாளர்கள் சந்திப்பில் ரோஹித் ஷர்மா கலந்துக் கொள்ளாததற்குக் காரணம், போட்டி முடிவுக்கு முன்னர் ஓய்வு குறித்த கேள்விகளைத் தவிர்க்க வேண்டும் என்பதற்காகத் தான். ” என்றார் கங்குலி.
மேலும், ” இந்திய அணியின் பேட்டிங் ஆர்டர் நல்ல பார்மில் உள்ளது. பவுலிங் யூனிட்டும் எதிரணிக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது. கோப்பையை வெல்ல இந்திய அணிக்கே வாய்ப்புகள் அதிகம். ஆனால் அழுத்தம் நிறைந்த இறுதிப் போட்டியில் யார் வேண்டுமானாலும் வெல்லலாம் தோற்கலாம். ” எனக் கூறினார் சவுரவ் கங்குலி.
இன்று போட்டியின் முடிவு எப்படி அமைந்தாலும், ரோஹித் ஷர்மா ஓய்வை அறிவித்தாலும் இல்லையென்றாலும், அவருக்கு கேப்டனாக இதுவே கடைசிப் போட்டியாக அமையும் எனத் தெரிகிறது. 2027 உலகக் கோப்பைக்காக எதிர்கால இந்திய அணியை மனதில் வைத்துக் கொண்டு கில்லை அடுத்தக் கேப்டனாக பிசிசிஐ அறிவிக்கும்.

