சில நாட்களுக்கு முன் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மாவுக்கு பிசிசிஐ தரப்பில் சில அழுத்தம் கொடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியது. அதாவது, சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு பின் ரோஹித் சர்மாவை ஓய்வை அறிவிக்கக் கோரி பிசிசிஐ தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து பிரஸ்மீட்டில் ரோஹித் சர்மாவிடம் கேள்வி எழுப்பப்பட்ட போது, அவர் டென்ஷனாகினார்.
ஏனென்றால் கடந்த ஓராண்டாகவே ரோஹித் சர்மா பேட்டிங்கில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அதிலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ரோஹித் சர்மா செய்த சொதப்பல் காரணமாக இந்திய அணி தோல்வியை சந்தித்தது. இதனால் அடுத்த கேப்டனை தேடுவதற்கான முயற்சியில் பிசிசிஐ இறங்கியுள்ளது.
ரோஹித் சர்மாவின் சொதப்பல்
இந்த நிலையில் சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி இங்கிலாந்து அணியை எதிர்த்து ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. முதல் போட்டியில் ரோஹித் சர்மா 2 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டமிழந்தார். இருந்தாலும் இந்திய அணி சுப்மன் கில், அக்சர் படேல் மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரின் அபார ஆட்டத்தால் வெற்றியை பெற்றது.
தற்போது கட்டாக் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து இடையிலான 2வது ஒருநாள் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இங்கிலாந்து அணி 49.5 ஓவர்களில் 304 ரன்கள் குவித்து ஆல் அவுட்டாகியது. சிறப்பாக ஆடிய ஜோ ரூட் 69 ரன்களும், பென் டக்கெட் 65 ரன்களும், லிவிங்ஸ்டன் 41 ரன்களும் விளாசினர். இந்திய அணி தரப்பில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதன்பின் இந்திய அணி தரப்பில் ரோஹித் சர்மா – சுப்மன் கில் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. முதல் ஓவரில் நிதானம் காட்டிய ரோஹித் சர்மா, 2வது ஓவரிலேயே சிக்சர், பவுண்டரி என்று பொளந்து கட்டினார். இதனால் ரசிகர்களும் இன்று ரோஹித் சர்மாவின் வெறியாட்டம் இருக்கிறது என்று உற்சாகமடைந்தனர். இதன்பின் ஒவ்வொரு ஓவருக்கும் ஒரு சிக்சரை விளாசி ரசிகர்களுக்கு ஆச்சரியம் கொடுத்தார்.
2 சாதனைகளை முறியடித்த ரோஹித் சர்மா
இந்தப் போட்டியில் ரோஹித் சர்மா 27 ரன்களை எட்டிய போது, கடைசியாக அவர் ஆடிய 11 இன்னிங்ஸில் இதுவே அதிகபட்ச ஸ்கோராக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் இந்த ஆட்டத்தில் 3 சிக்சரை விளாசியதன் மூலமாக சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்சரை விளாசிய வீரர்கள் பட்டியல் ரோஹித் சர்மா 2வது இடத்திற்கு முன்னேறி சாதனை படைத்தார். அதுமட்டுமல்லாமல் 331 சிக்சர்களை விளாசிய கிறிஸ் கெய்லின் சாதனையையும் முறியடித்தார்.
அதேபோல் இந்த போட்டியில் ரோஹித் சர்மா 22 ரன்களை எட்டிய போது, ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் விளாசிய இந்திய வீரர்கள் பட்டியலில் ராகுல் டிராவிட்டின் சாதனையை முறியடித்தார். 344 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள ராகுல் டிராவிட், 10,889 ரன்களை சேர்த்திருந்தார். இதனை ரோஹித் சர்மா முறியடித்து அசத்தியுள்ளார். மேலும் அவருக்கு 11 ஆயிரம் ரன்களை விளாசும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

