2025 ஐபிஎல் திருவிழா தொடங்கியுள்ள நிலையில், கிரிக்கெட் உலகில் பரபரப்பு எங்கும் நிறைந்திருக்கிறது. வரும் சனிக்கிழமை நடப்பு சாம்பியன்ஸ் கொல்கத்தா அணியும் பெங்களூர் அணியும் மோதுகின்றன. கடந்த ஒரு வாரமாக ஒவ்வொரு அணியின் வீரர்களும் ஒருங்கிணைந்து தங்களது சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த தயாராகி வருகின்றனர். இதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியைப் பொறுத்தவரை, கடைசி நேரத்தில் ஒரு அதிர்ச்சி செய்தி கொடுத்துள்ளது. வழக்கமான கேப்டன் சஞ்சு சாம்சனுக்குப் பதிலாக இளம் வீரர் ரியான் பராக் அணியை வழிநடத்த உள்ளார்.
ரியான் பராக்கின் பயணம் கடந்த ஆண்டுக்கு முன்பு வரை ஈர்கதக்கதாக இல்லாத போதில், 2024 ஐபிஎல் சீசன் அவரது வாழ்க்கையில் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. கடந்த ஆண்டு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக 573 ரன்கள் குவித்து, அணியின் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாகவும், ஒட்டுமொத்த தொடரில் மூன்றாவது அதிக ரன்கள் எடுத்த வீரராகவும் முன்னேறி அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். இந்த சிறப்பான ஆட்டம் அவரை இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணியில் விளையாடும் வாய்ப்பையும் பெற்றுத் தந்தது.
தற்போது மேலும் ஒரு படி மேலே சென்று, மார்ச் 23 மாலை சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் அணியை வழி நடத்தவும் காத்திருக்கிறார். முதல் மூன்று போட்டிகளுக்கு பராக் ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்படவுள்ளார். சஞ்சு சாம்சன் கடந்த மாதம் விரலில் அறுவை சிகிச்சை செய்துகொண்டு, பெங்களூருவில் உள்ள சிறப்பு மையத்தில் மறுவாழ்வு பெற்று திரும்பியுள்ளார். இந்திய டி20ஐ அணியின் முக்கிய ஒப்பனர் என்பதால் பிசிசிஐ அவரை ரிஸ்க் எடுக்க வேண்டாம் என அறிவித்தியுள்ளது. இன்னும் முழுமையாக குணமடையாததால், முதல் மூன்று போட்டிகளில் அவர் விக்கெட் கீப்பிங் மற்றும் ஃபீல்டிங் பணிகளை மேற்கொள்ள முடியாது.
இதனால், சஞ்சு பேட்ஸ்மேனாக மட்டும் விளையாடுவார் என்றும், இம்பாக்ட் பிளேயராக பயன்படுத்தப்படுவார் என்றும் தெரிகிறது. அவருக்கு பதிலாக இளம் வீரர் துருவ் ஜுரெல் விக்கெட் கீப்பராக செயல்படுவார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஜூரலுடன் கீப்பிங்கை பகிர்ந்துக் கொள்ளவுள்ளதாக சாம்சன் ஏற்கனவே கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
அசாம் அணியின் கேப்டனாக 2021 முதல் 2023 வரை 17 டி20 போட்டிகளில் 10 வெற்றிகளை பெற்ற அனுபவம் பராக்குக்கு உள்ளது. ரியான் பராக்கின் ஐபிஎல் கேப்டன்ஷி பயணம் மார்ச் 23 அன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக துவங்கி, அதன்பின் கொல்கத்தா மற்றும் சென்னை அணிகளுக்கு எதிராக வரை நீடிக்கவுள்ளது.
ஒரு காலத்தில் விமர்சனங்களுக்கு ஆளான பராக், தனது கடின உழைப்பால் திறமையை நிரூபித்து, இன்று கேப்டன் பொறுப்பை ஏற்கும் நிலைக்கு வந்துள்ளார். இந்த மாற்றம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு புதிய உத்வேகத்தை கொடுக்குமா, பராக் தனது தலைமையில் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். சாம்சன் மீண்டும் முழு உடற்தகுதியுடன் திரும்பும்போது, பராக்கின் பங்களிப்பு அணியின் எதிர்காலத்தை மேலும் வலுப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

