இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் பவுலிங்கை தேர்வு செய்தார். இதன்பின் களமிறங்கிய இந்திய அணி முதல் செஷன் முடிவில் 92 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்தது. இதன்பின் 2வது செஷன் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 215 ரன்களை குவித்தது.
பயமின்றி ஆடிய ரிஷப் பண்ட்
இதன்பின் கடைசி செஷன் முடிவில் இந்திய அணியின் ஸ்கோர் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 359 ரன்களாக உள்ளது. இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் 175 பந்துகளில் ஒரு சிக்ஸ், 16 பவுண்டரி உட்பட 127 ரன்களும், ஜெய்ஸ்வால் 101 ரன்களும் விளாசி இருக்கின்றனர். இந்த போட்டியில் இந்திய அணியின் துணைக் கேப்டன் ரிஷப் பண்ட் 102 பந்துகளில் 2 சிக்ஸ், 6 பவுண்டரி உட்பட 65 ரன்களுடன் களத்தில் உள்ளார்.
களமிறங்கிய முதல் ஓவரிலேயே பென் ஸ்டோக்ஸ் பந்தை டவுன் தி டிராக் இறங்கி வந்து பவுண்டரிக்கு தூக்கி அடித்தார். அதேபோல் வோக்ஸ் வீசிய கடைசி ஓவரில் கொஞ்சம் கூட விக்கெட் குறித்த கவலையில்லாமல் சிக்சருக்கு தூக்கி விளாசினார். இதனால் ரிஷப் பண்டின் ஆட்டம் ரசிகர்களிடையே உற்சாகத்தையும் ஏற்படுத்தியது.
ரிஷப் பண்ட் சாதனை
இந்த போட்டியில் ரிஷப் பண்ட் அரைசதத்தை எட்டிய போது, டெஸ்ட் கிரிக்கெட்டில் 3 ஆயிரம் ரன்களை விளாசிய வீரர் என்ற சாதனையை படைத்தார். அதுமட்டுமல்லாமல் அதிவேகமாக 3 ஆயிரம் ரன்களை விளாசிய ஆசிய விக்கெட் கீப்பர் என்ற சாதனையை படைத்துள்ளார். இதன் மூலமாக சங்கக்காரா மற்றும் தோனி ஆகியோரின் சாதனைகள் முறியடிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிவேகமாக 3 ஆயிரம் ரன்களை விளாசிய 2வது விக்கெட் கீப்பர் என்ற பெருமையையும் ரிஷப் பண்ட் பெற்றுள்ளார். 76 இன்னிங்ஸ்களில் ரிஷப் பண்ட் இந்த சாதனை படைத்திருக்கிறார். இவருக்கு முன்பாக ஆஸ்திரேலியா ஜாம்பவான் ஆடம் கில்கிறிஸ்ட் 63 இன்னிங்ஸ்களில் 3 ஆயிரம் ரன்களை விளாசி முதலிடத்தில் உள்ளார்.

