இந்தியா – தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்று ஜொகன்னஸ்பர்க் மைதானத்தில் நடக்கவுள்ளது. டி20 தொடர் 1 – 1 என்று சமநிலையில் முடிவடைந்த நிலையில், இந்திய அணி கேஎல் ராகுல் தலைமையில் ஒருநாள் தொடரில் களமிறங்கவுள்ளது. அடுத்ததாக டி20 உலகக்கோப்பை மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்று போட்டிகள் நடக்கவுள்ளது.
இதனால் ஒருநாள் போட்டிகளுக்கு பெரியளவில் சீனியர் வீரர்களை தேர்வு செய்யாமல் இளம் வீரர்கள் மற்றும் வாய்ப்பு கிடைக்காத வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவ்வளவு ஏன், இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தலைமையிலான பயிற்சியாளர் குழுவே டெஸ்ட் தொடரில் கவனம் செலுத்த போவதால், ஒருநாள் போட்டிகளுக்கு வேறு பயிற்சியாளர்கள் குழு செயல்படவுள்ளது.
இருப்பினும் சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், சாய் சுதர்சன், வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்ட திறமையான இளம் வீரர்கள் அணிக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் அக்சர் படேல், சாஹல் உள்ளிட்டோரும் நீண்ட இடைவெளிக்கு பின் மீண்டும் ஒருநாள் கிரிக்கெட் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் அவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து இந்திய அணியின் கேப்டன் கேஎல் ராகுல் பேசுகையில், ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை நான் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பராக செயல்படவுள்ளேன். டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இதே பணியை நான் செய்ய வேண்டும் என்று அணி நிர்வாகம் நினைத்தால், அதற்கும் எப்போதும் நான் தயாராக இருக்கிறேன்.
ஒருநாள் கிரிக்கெட்டை பொறுத்தவரை இந்திய அணி உலகக்கோப்பை தொடரில் எப்படியான ஆட்டத்தை வெளிப்படுத்தியதோ, அதில் எந்த மாற்றத்தையும் செய்ய போவதில்லை. சில ஜாம்பவான் வீரர்களின் இடத்தில் களமிறங்கும் இளம் வீரர்களுக்கு நிச்சயம் அவர்களின் திறமையை நிரூபிக்க போதுமான கால அவகாசமும், வாய்ப்பும் வழங்கப்படும்.
கேப்டன் என்ற பெயரில் அவர்களுக்கு எந்த அழுத்தத்தையும் கொடுக்க விரும்பவில்லை. சஞ்சு சாம்சன் விக்கெட் கீப்பிங் செய்வதற்கு சில போட்டிகளில் வாய்ப்பு கிடைக்கும் என்று நினைக்கிறேன். ஒருவேளை நான் செய்யவில்லை என்றால், அவர் விக்கெட் கீப்பராக செயல்படுவார். ஆனால் அவரின் ரோல் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன் தான். அதேபோல் ரிங்கு சிங் நிச்சயம் மிடில் ஆர்டர் வரிசையில் களமிறங்குவார். அவரின் பொறுமையும், நிதானமும் பார்ப்பதற்கு ஆச்சரியமளிக்கிறது என்று தெரிவித்தார்.

