அனல் பறக்க காத்திருக்கும் இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடர் வருகிற நவம்பர் மாதம் 22ஆம் பெர்த் மைதானத்தில் துவங்குகிறது. இந்தத் தொடரின் முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் சொந்த காரணங்களினால் ரோஹித் ஷர்மா வெளியேறுகிறார்.
இந்திய அணியின் நடப்பு துணை கேப்டனாக ஏற்கனவே ஷுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார். ரோஹித் இல்லாத பட்சத்தில் கில் கேப்டனாக செயல்படுவரா ? அல்லது வேறொருவரா ? என்பது குறித்து இன்னும் பிசிசிஐ தெளிவான அறிவிப்பு வழங்கவில்லை. ரோஹித் ஷர்மா இடத்தில் வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா புதிய கேப்டனாக செயல்பட வேண்டும் என்பது குறித்து முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் தன் கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
அவர் கூறியதாவது, ” ஆமாம், முதலில் புதிய டெஸ்ட் கேப்டனாக செயல்படுவது பும்ராவுக்கு சற்று கடினமான ஒன்றாகத் தான் இருக்கும். இதே போலத் தான் ஆஸ்திரேலியா கேப்டனாக பேட் கம்மின்ஸ் முன்னேறிய போதும் பல கேள்விகள் எழும்பியது. கேப்டன் ஆன பிறகு கம்மின்ஸ் எப்படி பவுலிங் போடுவார் ? அவரே முன்னின்று நிறைய பந்துவீசுவாரா அல்லது குறைவாகவா ? என்ற குழப்பம் நிலவியது. ஆனால் பும்ரா போன்ற அனுபவம் வாய்ந்த வீரர்களுக்கு எங்கு எப்போது எப்படி பந்துவீச வேண்டும் எனத் தெளிவாகத் தெரியும். “
” கேப்டனாக பும்ரா முன்னேறியதும், ஒரு முடிவு எடுக்கும் முன்பு தன் அனுபவத்தைப் பயன்படுத்தி அவரே அவருக்குள் பல்வேறு கேள்விகளைக் கேட்க வேண்டும். காரணம், என்னதான் அனுபவம் இருந்தாலும் அனைத்து முறையும் நாம் சரியாகத் தான் முடிவு எடுப்போம் என்பதற்கு எந்தவித உத்திரவாதமும் இல்லை. நான் கேப்டனாக இருக்கும் போது கூட கில்கிறிஸ்ட், லாங்கர் ஆகியோரிடம் ஆலோசனை கேட்டுவிட்டு பின்பு நானாக முடிவு எடுப்பேன். ” என்றார் பாண்டிங்.
அவர் மேலும், ” அனைத்து வடிவக் கிரிக்கெட்டிலும் இந்திய அணிக்கு பல ஆண்டுகளாக பும்ரா தான் அட்டாக்கிங்கை கையில் எடுத்து வழி நடத்தி வருகிறார். அதனால் அவர் நிச்சயம் சவால்களை ஏற்று பொறுப்பாக ஆடக் கூடிய வீரர். அவருக்கு கூடுதல் பொறுப்பைக் கொடுக்கும் போது இன்னுமே சிறப்பாக செயல்பட போராடுவார். ” என நம்பிக்கையாக பேசியுள்ளார் பாண்டிங்.
டெஸ்ட் கேப்டன்சியை பும்ரா என்னதான் கையில் எடுத்தாலும் அந்த அழுத்தம் அவரது ஆட்டத்தை பாதிக்காது என உறுதியாக நம்புகிறார் ரிக்கி பாண்டிங்.

