ஐ.பி.எல் 2025 – 2027 வரையிலான தொடர்களுக்கு புதிய விதிமுறைகளை இன்று பிசிசிஐ அறிவித்துள்ளது. இந்த விதிமுறையை அடுத்து அனைத்து அணிகளும் மெகா ஏலத்திற்கு தயாராகி வருகிறார்கள். வருகின்ற ஏலத்தில் பெங்களூர் அணி விராட் கோலி தவிர யாரையும் தக்க வைக்கைத் தேவை இல்லை என ஆர்.பி.சிங் தந்திர திட்டம் ஒன்றைக் கொடுத்துள்ளார்.
வருகிற ஆண்டு மெகா ஏலத்திற்கு முன்பு ஒவ்வொரு அணியும் அதிகபட்சமாக 6 வீரார்களைத் தக்க வைத்துக் கொள்ளலாம். இல்லையெனில் அதற்கு ஈடாக ஆர்.டி.எம் கார்டுகள் வழங்கப்படும். இதனுடன் அனைத்து அணிக்கும் பர்ஸ் தொகை 120 கோடியாக உயர்த்தப்பட்டுள்ளது. வீரர்களுக்கு கூடுதல் ஊதியமாக ஒரு போட்டிக்கு 7.5 லட்சம் வழங்கும் புதிய திட்டத்தை கொண்டு வந்துள்ளது பிசிசிஐ.
ஏலத்தில் 6 வீரர்கள் என்பது எத்தனை இந்திய / வெளிநாட்டு வீரர்களாக வேண்டுமானாலும் இருக்கலாம். இது ஐதராபாத், பெங்களூர், சென்னை, மும்பை, கொல்கத்தா என அனைத்து அணிகளுக்கும் பெரிய வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. அதே சமயம் அனைத்து வீரர்களையும் தக்க வைக்காமல் ஆர்.டி.எம் மூலம் தந்திரமாக குறைந்த விலைக்கு அதே வீரரை வாங்கும் தந்திரமும் உள்ளது குறித்து அண்மையில் ஆர்.பி.சிங் பேசியுள்ளார்.
முன்னாள் ஆர்.சி.பி வீரரான ஆர்.பி.சிங், பெங்களூர் அணி எவ்வாறு ஏலத்திற்கு தயாராக வேண்டும் என்பது பற்றி அவரது ஆலோசனையை வழங்கியுள்ளார். அவர் கூறியதாவது, ” பெங்களூர் அணி விராட் கோலியை மட்டுமே தக்க வைக்க வேண்டும். அவர் மட்டும் தான் 18 கோடிகளுக்குத் தகுதியானவர். ஆர்.சி.பி அணிக்காக அவர் செய்தது எவ்வளவோ. அதை மதிக்க வேண்டும். “
” மற்ற படி எந்த ஒரு வீரரும் அணியில் 14 கோடிகளுக்கு அதிபதியாக இருப்பதாக எனக்குத் தெரியவில்லை. தக்க வைப்பதற்கு பதிலாக பெங்களூர் அணி ஆர்.டி.எம் மூலம் பணத்தை சிக்கனமாக்கலாம். உதாரணமாக ராஜத் பட்டிதாரை தக்க வைக்காமல் ஆர்.டி.எம் கார்டு மூலம் வாங்கினால் நிச்சயம் 10 கோடிகளில் எடுத்துவிடலாம். அப்படியே அதற்கு மேல் சென்றாலும் ஆர்.டி.எம் மூலம் மீண்டும் வாங்கிவிடலாம். ” என்றார் ஆர்.பி.சிங்.
மேலும், ” பந்துவீச்சாளர் மொஹம்மத் சிராஜின் கடைசி ஓர் ஆண்டு செயல்திறனைப் பார்க்கையில் அவர் 11 கோடிகளுக்கு ஏற்றவரா என்பது ஓர் சந்தேகமாக உள்ளது. அதனால் அவரும் 14 கோடிகள் தாண்ட மாட்டார். ஒரு வேளை அவர் அதை எட்டினால் கூட ஆர்.டி.எம் பயன்படுத்தி மீண்டும் வளைத்துப் போட்டுவிடலாம். அதனால் பெங்களூர் அணி விராட் கோலியை மட்டும் தக்க வைத்துக் கொண்டு அவரைச் சுற்றி அணியை கட்டமைப்பதே சிறந்த திட்டம். “

