நடந்து முடிந்த டி20 உலக கோப்பை தொடரில் சிறப்பாக விளையாடி இந்திய அணி வெற்றிக்கு பங்களிப்பு செய்த இஷான் கிஷானுக்கு புதிய ஜாக்பாட் ஒன்று அடிக்க இருப்பதாக செய்திகள் தெரிவிக்கிறது.
2024 ஆம் ஆண்டு இறுதியில் தென் ஆப்பிரிக்க டெஸ்ட் சுற்றுப் பயணத்தின் போது மனவெறுமை காரணமாக இந்திய அணியில் இருந்து இஷான் கிஷான் விலகினார். ஆனால் அதற்கடுத்து அவர் ரஞ்சி தொடரில் ஜார்கண்ட் அணிக்காக விளையாட வரவில்லை. எனவே இந்திய சம்பள ஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்டார். இந்த ஆண்டு அதிரடியாக இந்திய டி20 அணிக்கு தேர்வு செய்யப்பட்டு உலகக் கோப்பை கதாநாயகனாகவும் மாறி இருக்கிறார்.
இந்த நிலையில் இந்த மாதம் இறுதியில் துவங்க இருக்கும் ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு புதிய கேப்டனாக இஷான் கிஷான் தேர்வு செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. அந்த அணியின் கேப்டன் கம்மின்ஸ் காயம் காரணமாக சில போட்டிகளுக்கு முன்கூட்டியே வந்து கலந்து கொள்ள முடியாத சூழல் இருப்பதாக சொல்லப்படுகிறது.
மேலும் இஷான் கிஷான் இந்த முறை உள்நாட்டு டி20 தொடரான சையத் முஸ்டாக் அலி தொடரில் ஜார்க்கண்ட் அணிக்கு கேப்டனாக இருந்து கோப்பையையும் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே அவரைப் புதிய கேப்டனாக கொண்டுவர சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் விரும்புவதாக கூறப்படுகிறது.

