ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் நேற்று முன்தினம் நடைபெற்றது/ இந்த மினி ஏலத்தில் சிஎஸ்கே, மும்பை, குஜராத் மற்றும் கேகேஆர் அணிகள் சிறப்பாக செயல்பட்டனர். ஒவ்வொரு வீரருக்கும் ஒரு ரோல் இருப்பதை முடிவு செய்து, அதற்கேற்ப வீரர்களை தேர்வு செய்தனர். அந்த வீரருக்காக எத்தனை கோடிகளை கொடுக்கவும் சிஎஸ்கே, கேகேஆர் உள்ளிட்ட அணிகள் தயங்கவில்லை.
ஆனால் ஆர்சிபி அணி மினி ஏலத்தின் போது மிக்சர் சாப்பிட்டு கொண்டே இருந்தது. எந்த வீரருக்கும் கைகளை தூக்காமல் திடீரென அக்சாரி ஜோசப்பை வாங்க தீவிரம் காட்டியது. அதுமட்டுமல்லாமல் யாஷ் தயாள், ஃபெர்குசன் மற்றும் டான் கரண் உள்ளிட்ட வீரர்களை வாங்கி ஆச்சரியம் அளித்தது. தேவையான வீரர்களை வாங்காமல் கிடைத்த வீரர்களை வாங்கியதாக பார்க்கப்பட்டது.
இருப்பினும் குஜராத் அணியின் பவுலிங் லைன் அப்பை அப்படியே ஆர்சிபி அணி வாங்கியது தெரிய வந்தது. இருப்பினும் ஆர்சிபி அணி ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். அதிலும் பிரபல கிரிக்கெட் அனாலிஸ்டும், ஆர்சிபி ரசிகருமான பிரசன்னா (Pdogg), நீ தான்டி என் ஐஸ்வர்யா ராய் என்று கலாய்த்த வீடியோ ட்ரெண்டிங்கில் உள்ளது.
ஆர்சிபி ரசிகர்கள் வேதனையில் இருப்பதற்கு 16 ஆண்டுகளாக அந்த அணியாக் ஐபிஎல் கோப்பையை வெல்ல முடியவில்லை என்பதே காரணமாக உள்ளது. விராட் கோலி, டி வில்லியர்ஸ், கிறிஸ் கெய்க், டூ பிளஸிஸ், கேஎல் ராகுல், அனில் கும்ப்ளே என்று எத்தனை வீரர்கள் ஆர்சிபி அணிக்காக ஆடியும் ஒருமுறை கூட கோப்பையை வெல்ல முடியவில்லை.
ஆனாலும் ஆர்சிபி அணியின் ரசிகர்களின் பலம் அதிகரித்து கொண்டே செல்கிறது. ஒவ்வொரு ஆண்டும் ஈசாலா கப் நம்தே என்று நம்பிக்கையுடன் மைதானத்திற்கு வந்து ஆதரவு அளித்து வருகின்றனர். இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி பெங்களூருவில் தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார்.
அப்போது ரசிகர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு தோனி பதில் அளித்தார். அப்போது ஆர்சிபி ரசிகர்கள் ஒருவர் எழுந்து, சிஎஸ்கே அணிக்காக 5 கோப்பைகளை வென்றுவிட்டீர்கள். இதற்கு பின் ஆர்சிபி அணிக்கு வந்து ஒரேயொரு கோப்பையை வென்று கொடுக்கலாமே என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த தோனி, ஆர்சிபி அணி மிகச்சிறந்த அணிகளில் ஒன்று என்று கூறுவேன்.
ஆனால் கிரிக்கெட்டில் எல்லாமே நாம் செய்த திட்டங்களின்படி நடக்காது. சிஎஸ்கே அணியில் உள்ள பிரச்சனைகள் பற்றி கவலைப்படுவதற்கே எனக்கு ஏராளமான விஷயங்கள் உள்ளன. அதேபோல் நான் இன்னொரு அணிக்காக விளையாட வந்தால், எங்களின் ரசிகர்கள் எப்படி உணர்வார்கள் என்று தெரிவித்தார்.

