இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் அஸ்வின் கடந்த டிசம்பர் மாதம் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். இதன்பின் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக ஆடிய அஸ்வின், தற்போது ஐபிஎல் தொடரில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். அதேபோல் உலகின் பல்வேறு லீக் போட்டிகளிலும் விளையாட உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
அஸ்வின் ஓய்வு
இதன் மூலமாக அஸ்வின் இனி உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களிலும் விளையாட வாய்ப்பில்லை என்று தெரிகிறது. பிசிசிஐ விதிகளின்படி உள்நாட்டு கிரிக்கெட் தொடரில் ஆடி வரும் எந்த வீரரும் சர்வதேச லீக் போட்டிகளில் விளையாட அனுமதி கிடையாது. இதனால் இனி அஸ்வின் எஸ்ஏ 20 லீக் தொடர், எம்எல்சி தொடர் ஆகியவற்றில் ஆடுவர் என்று எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் திடீரென அடுத்த ஓராண்டுக்குள் இங்கிலாந்து மண்ணில் நடந்து வரும் ஹன்ட்ரட் லீக் தொடரில் விளையாட வாய்ப்பு உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இங்கிலாந்தில் நடக்கும் ஹன்ட்ரட் லீக் தொடரில் அம்பானி, சஞ்சீவ் கொயங்கா, காவ்யா மாறன் உள்ளிட்ட பல்வேறு அணிகளின் உரிமையாளர்களும் முதலீடு செய்திருக்கின்றனர்.
காவ்யா மாறன் அணியில் அஸ்வின்?
அந்த வகையில் காவ்யா மாறன் நார்த்தர்ன் சூப்பர்சார்ஜர்ஸ் அணியில் முதலீடு செய்துள்ளார். இதனால் அஸ்வினை ஹன்ட்ரட் லீக் தொடரில் விளையாட வைக்க காவ்யா மாறன் முயற்சிகள் மேற்கொண்டு வருவதாக தகவல் கிடைத்துள்ளது. ஏனென்றால் இங்கிலாந்துக்கு வெளியில் ரசிகர்கள் ஹன்ட்ரட் லீக் தொடரை கவனிப்பது இல்லை.
இதனால் ஹன்ட்ரட் லீக் தொடரில் இங்கிலாந்து வீரர்கள் அல்லாமல் வெளிநாட்டு வீரர்களை விளையாட வைக்க ஆர்வம் காட்டப்பட்டு வருகிறது. குறிப்பாக எஸ்ஏ20 லீக் தொடருக்கு இணையாக இந்தியாவில் ரசிகர்கள் ஹன்ட்ரட் லீக் தொடரை ரசிகர்கள் மத்தியில் கொண்டு செல்ல அந்த லீக் நிர்வாகிகள் தீவிரமாக இருக்கின்றனர். இதனால் அஸ்வினுக்கு அதிக தொகை ஊதியமாக அளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

