இந்திய கிரிக்கெட் அணி நாளை தென்னாபிரிக்க அணிக்கு எதிரான கடைசி மற்றும் மூன்றாவது ஒரு நாள் போட்டியில் விளையாட இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் தற்போதைய ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு கௌதம் கம்பீர் தனது வேலை என்ன என்று அவரிடம் தெளிவாக சொல்ல வேண்டும் என்று சில விஷயங்களை பேசி இருக்கிறார்.
தென்னாபிரிக்க அணிக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் 13 ரன் எடுத்த வாஷிங்டன் சுந்தர், பந்துவீச்சில் வெறும் மூன்று ஓவர்கள் மட்டுமே வீசினார். அதற்குப் பிறகு இரண்டாவது ஒரு நாள் போட்டியில் 1 ரன்னில் அவர் ஆட்டம் இழந்த நிலையில் பந்துவீச்சில் வெறும் நான்கு ஓவர்கள் மட்டுமே வீசினார். இதனால் அடுத்தடுத்த தொடர்களில் அவர் விளையாடுவாரா? என்கிற சந்தேகம் பலரிடையே எழுகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியில் தனது வேலை என்ன? என்பதை முதலில் அவர் புரிந்து கொள்ள வேண்டும் என்று ரவிச்சந்திரன் அஸ்வின் சில விஷயங்களை பேசி இருக்கிறார்.
இது குறித்து அஸ்வின் பேசும்போது “முதலில் நீங்கள் வாஷிங்டன் சுந்தரை விளையாட முடிவு செய்தவுடன் அவரை ஒரு பேட்டிங் செய்யக்கூடிய பந்துவீச்சாளராக பார்க்க வேண்டும். அவர் தொடர்ந்து பந்து வீசினால் மட்டுமே ஒரு ஆல் ரவுண்டர் என்பது அவர் மனதில் இருக்கும். சில ஓவர்கள் மட்டுமே வீசினால் தான் யார் என்பதை அவர் தேடிக் கொண்டே இருப்பார். அந்த நிலைக்கு அவரை விட்டு விடாதீர்கள். இந்த நிலை ஏற்படக் கூடாது என்றால் முதலில் தனது ரோல் என்ன என்பது அவருக்கு தெரிய வேண்டும். ரோல் கிளாரிடி என்பது மிகவும் முக்கியம்” என்று அஸ்வின் பேசியிருக்கிறார்.

