ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பங்கேற்க இந்திய அணி இன்று ஐக்கிய அரபு அமீரகம் புறப்படுகிறது. சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான முதற்கட்ட அணியில் ஜெய்ஸ்வால், பும்ரா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். ஆனால் கடந்த வாரம் வெளியான அணியில் பும்ரா காயம் காரணமாக விலகுவதாகவும், ஜெய்ஸ்வால் ரிசர்வ் வீரராகவும் சேர்க்கப்பட்டிருந்தார்.
இவர்களுக்கு பதிலாக ஹர்சித் ராணா மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகியோர் சேர்க்கப்பட்டனர். வருண் சக்கரவர்த்தியை சேர்த்ததோடு இந்திய அணியில் மட்டும் 5 ஸ்பின்னர்கள் சேர்க்கப்பட்டிருப்பது தெரிய வந்தது. ஏற்கனவே அக்சர் படேல், ஜடேஜா, குல்தீப் யாதவ், வாஷிங்டன் சுந்தர் ஆகிய 4 ஸ்பின்னர்கள் இந்திய அணியில் இருந்தனர்.
5 ஸ்பின்னர்கள் எதற்கு?
தற்போது 5வது ஸ்பின்னராக வருண் சக்கரவர்த்தி சேர்க்கப்பட்டுள்ளார். அதாவது ஒரு பேட்ஸ்மேனை நீக்கிவிட்டு அந்த இடத்தில் பிசிசிஐ ஸ்பின்னரை கொண்டு வந்துள்ளது. இதுகுறித்து இந்திய முன்னாள் வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் கேள்வி எழுப்பியுள்ளார். இந்த விஷயம் குறித்து அஸ்வின் பேசும் போது, இந்திய அணி தேர்வில் எனக்கு இருக்கும் குழப்பம் என்னவென்றால், துபாய்-க்கு ஏன் இத்தனை ஸ்பின்னர்கள் என்பதுதான்.
5 ஸ்பின்னர்களை தேர்வு செய்திருப்பதால், ஜெய்ஸ்வால் போன்ற ஒரு பேட்ஸ்மேனை வெளியில் அமர வைத்திருக்கிறோம். இந்திய அணி ஒவ்வொரு சுற்றுப்பயணத்திற்கும் 4 ஸ்பின்னர்களுடன் பயணிக்கும் என்பது நன்றாக தெரியும். ஆனால் துபாய் மைதானத்தில் விளையாட ஏன் 5 ஸ்பின்னர்கள்? என்னை பொறுத்தவரை கூடுதலாக ஸ்பின்னர்களை அழைத்து செல்கிறோம் என்று தோன்றுகிறது.
குல்தீப் யாதவ் நிச்சயம்
இந்திய அணியின் பிளேயிங் லெவனில் குல்தீப் யாதவ் நிச்சயம் விளையாடுவார் என்பதில் கொஞ்சம் கூட சந்தேகம் கிடையாது. பின் எப்படி வருண் சக்கரவர்த்திக்கு பிளேயிங் லெவனில் இடம் கிடைக்கும்? நிச்சயம் அவர் நன்றாக பவுலிங் செய்கிறார். ஒருவேளை வருண் சக்கரவர்த்தி மற்றும் குல்தீப் யாதவ் இருவரை பிளேயிங் லெவனில் ஆட வைத்தால் எனக்கு சந்தோஷம்தான்.
ஆனால் துபாய் பிட்சில் பந்து டர்னாகும் என்று எதிர்பார்க்கிறீர்களா என்பதுதான். ஏன் சொல்கிறேன் என்றால், நடந்து முடிந்த ஐஎல்டி20 லீக்கில் பந்து பெரியளவில் டர்ன் ஆகவில்லை. ஒவ்வொரு அணியும் 180 ரன்களை எளிதாக சேஸ் செய்தனர். இந்த இந்திய அணியை நினைத்தால், எனக்கு சரியாக படவில்லை என்று கூறியுள்ளார்.

